அமித்ஷா வருகையால் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் – விவரம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7 ஆம் தேதி மதுரை வந்தார். மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 50 தொகுதிகளை அடையாளம் காணவேண்டும். அதில் பாஜக போட்டியிடும். தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று பேசினார்.

இதன்மூலம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைச்சரவை இல்லை என்று அறிவித்தாலும், கூட்டணி அமைச்சரவையா, இல்லையா? என்பதை எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்ய முடியாத நிலையில்தான் இருக்கிறார்.

அதிமுக கூட்டணியைக் கூட டெல்லி பாஜகதான் முடிவு செய்யக்கூடிய நிலை உள்ளது. இதனால் அதிமுகவிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் பாஜ 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் கடந்த முறை பாஜக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை 50 தொகுதிகளைக் குறி வைத்துள்ளது. கடந்த முறை பாமக 23 தொகுதிகளில் அதாவது பாஜகவை விட 3 தொகுதி அதிகமாக வேண்டும் என்று கேட்டுவாங்கிப் போட்டியிட்டது.

ஏனெனில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக பாமக இருந்தது.
ஆனால் தற்போது அக்கட்சி தந்தை, மகனுக்கிடையே நடைபெறும் அதிகாரப் போட்டியில் நிலைகுலைந்துள்ளது. இதனால் பாமக இந்த முறை பாஜகவை விட அதிக இடங்கள் கேட்டுப் பெற முடியாத நிலைதான் உள்ளது. அதே தொகுதிகளைப் பெற முடியுமா என்கிற நிலையும் உள்ளது. இராமதாசு இந்த முறை கூட்டணியை முடிவு செய்ய இருப்பதால், அவர் குறைந்தது 50 தொகுதிகளாவது கேட்பார்.

அதேபோல கடந்த முறை தேமுதிக, டிடிவி தினகரன் ஆகியோர் தனியாகக் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தனர்.இந்த முறை அவர்களும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனால் அவர்களில் தேமுதிக குறைந்தது 25 தொகுதிகளாவது கேட்கும். அதுதவிர டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 10 இடங்கள் வேண்டும் என்று கேட்கின்றனர்.

இதைத் தவிர புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட சில சிறிய கட்சிகளும் உள்ளன. அவர்களும் தொகுதிகளைக் கேட்கின்றனர். இப்படிப் பார்த்தால், 130 தொகுதிகளுக்கு மேல் கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது வரும்.

அப்படி என்றால் அதிமுக 100 க்கும் குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். இதனால் இந்த முறை வசமாக பாஜவிடம் அதிமுக சிக்கிக் கொண்டு தவியாய்த் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Response