சீமான் வீட்டில் நடந்தது என்ன? அடுத்து என்ன? – பரபரக்கும் தகவல்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில், விஜயலட்சுமி அந்த புகாரைத் திரும்பப் பெற்றார்.

அதன்பின்,மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை இரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் காரணமாக, இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி – 27) விசாரணைக்கு வருமாறு சீமானுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.அதற்கு, சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் 4 வார கால அவகாசம் கோரி மனு கொடுத்தனர்.

அதை ஏற்காத காவல்துறையினர், பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்குச் சென்று, நாளை (பிப்ரவரி – 28) காலை 11 மணிக்கு விசாரணைக்கு வரும்படி அழைப்பாணையை அவர் வீட்டுக் கதவில் ஒட்டினர்.

அப்போது அங்கிருந்த நாதக நிர்வாகி அந்த அழைப்பாணையைக் கிழித்தார். இதனையடுத்து அந்த நபரைக் கைது செய்வதற்காக சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியை காவல்துறையினர் கேட்டதற்கு தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.அதனால் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வண்டிக்குள் திணித்தனர்.

அதேபோல்,அழைப்பாணையைக் கிழித்த நாதக நிர்வாகி சுதாகர் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, வீட்டின் காவலாளி இராணுவ வீரர் என்பதால், அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காவல்துறையினர் ஒட்டிய அழைப்பாணையைக் கிழிக்கச் சொன்னது நான் தான் என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், மீண்டும் அழைப்பாணை ஒட்டிக் கொள்ளலாம் என்றும் சீமான் மனைவி கயல்விழி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ததாகச் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டனர்.

சீமான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓசூர் சென்றுள்ள நிலையில், பாலவாக்கத்தில் நடந்த இச்சம்பவம் நாதக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒருவர் வீட்டில் இல்லையெனில் அழைப்பாணையை ஒட்டிவிட்டு அதை புகைப்படம் எடுத்துக் கொண்டு காவல்துறையினர் சென்றுவிடுவார்கள்.ஆனால் இங்கு அதைத்தாண்டி காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அக்கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே நாளையும் விசாரணைக்கு சீமான் செல்லவில்லையெனில் அதை நீதிமன்றத்தில் சொல்லி அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பெறலாம் என்றும் அதனடிப்படையில் அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response