இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர்.தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 விழுக்காட்டுக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியிலிருந்து விலகினார்.அதனால், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகே நியமதித்தார்.
இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அதிபர் அனுர குமார திசநாயகே அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதிபர் அனுர குமார திசநாயகே அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 21 ஆம் தேதிதான் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக பாராளுமன்றத் தேர்தலை அறிவித்துள்ளார் புதிய அதிபர்.இன்னும் சில நாட்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கவிருக்கிறது என்பதால் அங்கு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பரபரப்படைந்துள்ளனர்.