
நடிகர் ஜெயம்ரவி, தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இப்போது பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.அதற்காகவே விவாகரத்து செய்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் பாடகி கெனிஷாவால் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஜெயம்ரவி.
அவருடன் இலங்கை சென்றுள்ளார் ஜெயம் ரவி.அவரும் பாடகி கெனிஷாவும் சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.
கெனிஷா இசையமைத்துப் பாடி, அண்மையில் வெளியான ‘அன்றும் இன்றும்’ என்ற பாடல் காணொலி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை செல்வதாக சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கெனிஷா.
அங்கு போனவர்கள் அவர்களுடைய வேலையை மட்டும் பார்க்காமல் சிங்கள அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் பங்கேற்க உள்ளதுதான் எதிர்ப்புக்கும் சர்ச்சைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இவர்கள் சந்தித்த விவரத்தை தன்னுடைய சமூகவலைத் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத, இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினோம்.இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும்
உதவும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத குறிப்பிட்டுள்ளார்.
தமிழினத்தை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்துவிட்டு அதுதொடர்பான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்காமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் சிங்கள அரசு, தமிழ்நாட்டு பிரபலங்களை வைத்தே இலங்கை அரசாங்கம் சுமுகமாக இருக்கிறது என்கிற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது.
தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு சலுகை காட்டுகிறோம் என்று சொல்லி பல்வேறு படப்பிடிப்புகளை அங்கு நடத்த அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில்,சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் மதராசி ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அங்கு நடந்தது.
அந்தப் படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட ஜெயம்ரவி, இப்போது இன்னும் ஒருபடி மேலே போய்,அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் முன்வந்துள்ளார்.
இது ஈழத்தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம்ரவி சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத,தமிழ் இனப்படுகொலையை வெளிப்படையாக மறுப்பதோடு, அந்த வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்டவரைச் சந்தித்து அவ்ருடைய வேலைத் திட்டத்தில் பணியாற்றப்போவதாகச் செய்திகள் வருவதால் ஈழத் தமிழர்களிடமும் தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்களிடமும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடமும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிறப்பால் தெலுங்கரான இந்த நடிகருக்கு, தமிழர்களின் வேதனை புரிய வாயப்பில்லை. இனி வருங்காலங்களில் அவருடைய திரைப் பயணம் தொடர தமிழக, தமிழீழ மானத்தமிழர்கள் நாங்கள் விடமாட்டோம் என்பது உட்பட கடுமையான சொற்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜெயரவி இதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அவருடைய படங்களைப் புறக்கணிப்போம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த எதிர்ப்புக் குரல்களின் அடிநாதமாக உள்ளது தமிழின வலி. இதை, ஜெயம்ரவியின் காதுகளை எட்டுமா? அவர் சிங்கள அரசின் கைக்கூலியாக மாறுவதைக் கைவிடுவாரா? என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


