21 மாநிலங்களில் 102 தொகுதிகள் – முதல்கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது

18 ஆவது மக்களவைக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது.அதன்படி முதல் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

அதன்படி, முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றம், விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவைக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டியில்…

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்குப் பிறகும் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண் வாக்காளர்களும், 3.17 கோடி பெண் வாக்காளர்களும், 8,267 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரை உள்ள 10.92 இலட்சம் இளம் வாக்காளர்கள் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 4,61,771 பேரும், 85 வயதுக்கு மேல் 6,14,002 பேரும் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 1,08,804 பேர் தபால் வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 3.23 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு 3 கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 874 ஆண்களும், 76 பெண்களும் உள்ளனர்.

தேர்தலைக் கண்காணிக்க 39 பொதுப் பார்வையாளர்கள், 20 காவல்துறை பார்வையாளர்கள், 58 தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் கண்காணிக்க சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் ஒருவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 190 கம்பெனி துணை இராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50 கம்பெனி துணை இராணுவ வீரர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பணியில் இருப்பார்கள்.

மீதமுள்ள துணை இராணுவ வீரர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கான மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் பகுதியில் துணை இராணுவ வீரர்களும், 2, 3 கட்டப் பாதுகாப்பில் உள்ளூர் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள், 181 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு கூடுதல் துணை இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அங்கு வெப்கேமரா பொருத்தப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 44,801 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்குப்பதிவை சென்னை, தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் தமிழ்நாடு அரசு காவல்துறையினர் 1 இலட்சம் பேர், முன்னாள் இராணுவ வீரர்கள் 12,220 பேர், ஓய்வுபெற்ற காவல்துறையினர் 2,000 பேர், கேரளா, ஆந்திரா, தெலங்கானா காவல்துறையினர் 3,500 பேர், ஊர்காவல் படை வீரர்கள் 450 என மொத்தம் 1.30 இலட்சம் பேரும், இவர்களுடன் 190 கம்பெனி துணை இராணுவ வீரர்களும் (20 ஆயிரம் பேர்) ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் 68,321 வாக்குப்பதிவு மையங்களில 1,58,568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 81,159 கட்டுப்பாட்டு இயந்திரம், 86,858 விவிபேட் பயன்படுத்தப்படும்.

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 325 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Leave a Response