இந்தத் தேர்தலில் பாஜக வெல்லும் தொகுதிகள் இவ்வளவுதான் – இராகுல் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர்.

அப்போது இராகுல் காந்தி கூறியதாவது….

வரும் மக்களவைத் தேர்தல் இரு கருத்தியல்களுக்கான தேர்தல்.ஒருபுறம்,அரசியலமைப்பிற்கும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கும் முடிவு கட்ட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளன. மறுபுறம், அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாக்கும் இந்தியா கூட்டணி உள்ளது.

இந்தத் தேர்தலில் பேசப்படுகின்ற மிக முக்கிய பிரச்னைகளாக வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை உள்ளன. ஆனால் அவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியோ சில சமயம், கடலுக்கு அடியில் செல்கிறார், சில சமயம் விமானத்தில் பறக்கிறார். ஆனால் பிரச்னைகள் பற்றி மட்டும் எங்குமே அவர் வாய் திறப்பதில்லை.

மோடியின் சமீபத்திய நேர்காணல் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டது. அது ஒரு தோல்வி அடைந்த நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரம் குறித்து கூட மோடி விளக்கம் தந்துள்ளார்.அவர் கூறியபடி, அரசியலை தூய்மைப்படுத்துவதற்காகவும் வெளிப்படைத்தன்மைக்காகவும்தான் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டது என்றால், அதை உச்சநீதிமன்றம் ஏன் இரத்து செய்தது? வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் ஏன் மறைக்கப்பட்டன? அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை அளித்த தேதிகள் ஏன் மறைக்கப்பட்டன? நன்கொடை தந்த பிறகு ஒரு நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்திய 10-15 நாட்களுக்குப் பிறகு ஒரு நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் தான், உலகின் மிகப்பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம். பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் மோடிதான் அந்த ஊழலின் சாம்பியன் என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்.

கடந்த 15-20 நாட்களுக்கு முன்பு கூட பாஜக 180 தொகுதிகள் வரை வெல்லும் என்ற சூழல் இருந்தது. இப்போது அது 150 இடங்களாகச் சுருங்கி விட்டது. இந்தியா கூட்டணிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை மிகவும் சக்தி வாய்ந்தது. எங்கள் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏழ்மையை ஒரே நேரத்தில் ஒழித்து விடுவோம் என யாரும் சொல்லவில்லை. ஆனால் அதற்காக பலமான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

இவ்வாறு இராகுல் காந்தி கூறினார்.

Leave a Response