தமிழ்நாடு அரசு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் இரவி கோரிக்கை

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியனவறிற்கு துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி செப்டம்பர் 6 ஆம் தேதி உத்தரவிட்டார்.

அதில் முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதியைச் சேர்த்திருந்தார். தமிழ்நாட்டில் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். மூன்று பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதி ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதனால், ஆளுநர் விதித்த நிபந்தனை தொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை சார்பில் விளக்கக் கடிதம் அனுப்பியது. அதில், யு.ஜி.சி பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், ஆளுநர் துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாகத் தேடுதல் குழு அமைத்து உத்தரவிட்டார். அதில், முதல்முறையாக யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழுவின் விவரங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு அதிரடியாக வெளியிட்டது. அதில், குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆளுநர் சார்பில் கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, உறுப்பினர்களாக பல்கலை. சிண்டிகேட் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, செனட் சார்பில் பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.ஆளுநர் முன்பு வெளியிட்ட தேடல் குழு அறிவிப்பில் 4 ஆவது உறுப்பினராக இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரின் பெயர் இதில் நீக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்தத் தேடுதல் குழு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் இப்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்லில்….

சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைப் பரிந்துரை செய்வதற்கான தேடல் குழுவை அமைத்து தமிழ்நாடு ஆளுநரும், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.இரவி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டார். அந்த தகவல் ஆளுநர் மாளிகையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு, செய்திக்குறிப்பு மூலம் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தச்சூழலில் விதிகளுக்குப் புறம்பாக சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற்றிருந்த யுஜிசி உறுப்பினரை தவிர்த்துவிட்டு உயர்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அறிவிக்கையானது செப்டம்பர் 13 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடைபிடிக்காமல் அதை மீறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாகும். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கும் சூழலில், அவரின் ஒப்புதல் பெறாமல் பல்கலைக்கழக விவகாரங்களில் செயல்படுவதற்கு உயர்கல்வித் துறை செயலருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response