தமிழர் தந்தை எனப்போற்றப்படும் சி.பா.ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார்.
‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப்பெயர். ஆதித்தனாரின்இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் ‘. அவருடைய தந்தையார் வழக்கறிஞர்.
சி.பா.ஆதித்தனார் தமது பள்ளிப்படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார்.திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே ‘தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார்.
இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்கள் சுயமாகத் தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் இலண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இலண்டனில் படிக்கும் போதே செய்தியாளராகப் பணியாற்றி படிப்புச் செலவிற்குச் பணம் சம்பாதித்தார்.
சுதேசமித்திரன், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இலண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு இலண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே.
இலண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
இலண்டனில் பாரிஸ்டர் பட்டம்பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர்நாட்டில் பெரும் தொழில்அதிபராக விளங்கிய ஓ.இராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி.பா.ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச்சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.
“அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும்? இருப்பதும் போய்விடும்” எனக் கூறி இதழ் நடத்துவதைத் தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.
முதன் முதலில் ‘மதுரை முரசு’ என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, ‘தமிழன்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல்தான்.
மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில்,கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள்.
ஆதித்தனார் “மதுரையில் போலீஸ்துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!” என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘மதுரை முரசு’ இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில்நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ்நடையில் விளக்கினார். “ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்” என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.
பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள்,கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப்படங்கள் இவற்றைக் கையாண்டார்.அரசியல், பொருளாதாரம்,வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச்செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவினார்.
பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி.மு.க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் சட்டமன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம்ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராகப் பணியாற்றினார்.
திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா.ஆதித்தனார்’இதழாளர் கையேடு’ என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல்இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.
‘உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு’ என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களைத் தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள்மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா.ஆதித்தனார்!
1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானார்.
தமிழ்நாட்டில் 1938 இல் உருவான இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் எழுப்பப்பட்டது. இது தமிழ்த் தேசியத்தின் முதல் எழுச்சிப் போராட்டமாகும். அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனாரை இந்தப் போராட்டம் மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பினார்.
உடனடியாக சென்னைக்கு குடும்பத்தோடு வந்தடைந்தார். அப்போது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் நீதிக்கட்சியால் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றம் பெற்றிருந்தது. அதனை விரும்பாத ஆதித்தனார் தனித்தமிழ் நாடு கோரும் இயக்கமொன்றை தனியாக உருவாக்க எண்ணினார். அதன்படி 1942 இல் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை தொடங்கினார். பின்னர் அதனை 1957 இல் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்று பெயர் மாற்றினார்.
அதற்கான காரணத்தை அவரே விளக்குகிறார். “நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் ‘சின்பெயின்’. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள். பிரித்தானியரும் ஐரிஷ் மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் ‘நாம் தமிழர்’ என்று சொல்லும் போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரைத் தெரிவு செய்தேன்”. என்றார்.
1942 ஆம் ஆண்டு ‘தமிழப்பேரரசு’ எனும் அரிய நூலை வெளியிட்டார். ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர்கள் இழந்த ஆட்சி உரிமையைப் பெற்று, ஒரு பேரரசாக உலகத்தில் மீண்டும் விளங்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது. அந்நூலில், ஆதித்தனார் கூறுகிறார், “தமிழ்நாட்டின் வரலாற்றில் 600 ஆண்டு என்பது ஒரு கால வட்டம் ஆகும். அதாவது, தமிழர்களுக்கு 600 ஆண்டு வாழ்வும் அதன் பின் தாழ்வுமாக மாறி மாறியே வந்துள்ளது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பிற நாட்டவர்களான வடவர்களைத் தோற்கடித்து தமிழர்கள் ஆண்டார்கள். வில்,புலி, மீன் கொடி உயரப் பறந்தது. முதல் 600 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்கால வட்டமாகும். அடுத்து, கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள், பல்லவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். வில், புலி, மீன் கொடி மறைந்தது. வடமொழி வளர்ந்தது. இரண்டாவது 600 ஆண்டுகள் தமிழகம் அடிமைக்கால வட்டமாகும்.
அடுத்து, வடநாட்டு அரசர்களுக்கும், வடமொழிக்கும் அடிமைப்பட்ட தமிழினம் மீண்டும் 9 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசால் தலை நிமிர்ந்தது. மூன்றாவது 600 ஆண்டுகள் தமிழகத்தின் இரண்டாவது பொற்கால வட்டமாகும்.
அடுத்து கி.பி.14ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை தமிழினம் அடிமையாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விசயநகரப் பேரரசு, உருது நவாப்புகள் அரசு, ஆங்கிலப்பேரரசு, தில்லி இந்திப் பேரரசு என்று தொடர்ந்தாற் போல் வேற்றினத்தாரால் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது. இந்த 600 ஆண்டுகள் தமிழகத்திற்கு ‘கறுப்பு கால வட்டம்’ என்ற போதிலும் அதனைத் தற்போது கடந்து விட்டோம். தமிழகத்தின் பொற்காலம் மீண்டும் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்மக்கள் விழித்து எழுவது உறுதி. சுதந்திர தமிழப் பேரரசு அமைத்திடுவோம் என்று விரிவாக அந்த நூலில் ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.
உலகில் சிறுபான்மையினர் என்றாலே அதற்கு அடிமை என்று பொருள். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை. சிங்களரோ பெரும்பான்மை. அதனால் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். அதுபோல் இந்தியாவில் இந்தி பேசுபவர் பெரும்பான்மை. தமிழ்நாட்டினர் சிறுபான்மை. அதனால் தில்லி ஆட்சிக்கு தமிழர்கள் அடிமையாக உள்ளனர்.
அறிஞர் அண்ணா எழுப்பும் திராவிட நாட்டிலும் தெலுங்கர்கள் அதிகமாக இருப்பர். தமிழர்கள் சிறுபான்மை ஆகி விடுவர். எனவே திராவிட நாடு கிடைத்தாலும் அதிலிருந்து விடுபட தமிழ்நாடு விடுதலையை நடத்துவேன் என்றும் முழங்கினார்.
சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றது என்று பாரத மாதா புத்திரர்கள் கேலி பேசி வந்தனர்.
அப்போது, “தமிழ்நாட்டை விடச் சிறியவைகளான 74 நாடுகள் முழு உரிமையுடன் வாழுகின்றன. அவை குண்டுச் சட்டியை விடச் சின்னஞ்சிறிய தேநீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுவது கண்ணுக்குத் தெரிய வில்லையா?” என்று பதிலடி தந்தார்.
1958 இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ மாநாடு நடத்தினார். அதில் இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட நிலையில் அவரோடு இணைந்து (1960) பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அதில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியைத் திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்ட முனைந்த போதும் கைது செய்யப்பட்டார்.
ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்கு ‘தமிழன்’ என்றும், இயக்க அலுவலகத்திற்கு ‘தமிழன் இல்லம்’ என்றும், இயக்க வார இதழுக்கு ‘தமிழ்க்கொடி’ என்றும், பதிப்பகத்திற்கு ‘தமிழ்த்தாய்’ என்றும் பெயர் சூட்டினார்.
தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள்மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா.ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானார்.