குடியரசுத்தலைவருக்கே தீண்டாமைக் கொடுமையா? – சீமான் கடுங்கோபம்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சனாதனத்தின் ஆட்சியா? என் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

தில்லியிலுள்ள ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அனுமதிக்காத கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைக் கருவறைக்குள் வழிபட அனுமதித்துவிட்டு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வெளியே நிறுத்தி அவமதித்திருப்பதென்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் முதல் குடிமகளையே தீண்டாமைக்கோட்பாட்டுக்கு ஆளாக்கி, விலக்கி வைப்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பேரவமானமாகும். இது ஒவ்வொரு குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும்.

மக்களாட்சியின் தலைவரான குடியரசுத்தலைவரையே சாதியத் தீண்டாமையோடு அணுகி, மக்களாட்சியின் செயலகமான பாராளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்காது புறக்கணித்த கொடும்நிலை உலகில் எந்த நாட்டிலும் நடந்திராத கேலிக்கூத்தாகும். நாட்டின் முதல் குடிமகளுக்கு இந்நிலையென்றால், இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை! சனாதனத்தின் ஆட்சி நடக்கிறதா? அரசியலமைப்புச்சாசனம்தான் நாட்டை ஆள்கிறதா? இல்லை! மனுதர்மம் ஆள்கிறதா?

முந்தைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஒடிசாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்குள் அனுமதிக்காது அவமதித்ததன் நீட்சியாக, தற்போது திரௌபதி முர்முவையும் டெல்லி ஜெகன்நாதர் கோயிலுக்குள் அவமதித்து வெளியே நிறுத்தியிருப்பது வெட்கக்கேடானதாகும். நாட்டின் முதல் குடிமகனாகி, சட்டத்தின் தலைவராக ஆனாலும், அவர்களை வருணாசிரமத்தின்படிதான் அளவிடுவார்ளென்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response