
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு 7 மணியளவில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்….
வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றது மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் செந்தில்பாலாஜி குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். அவர் அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, விசாரணையில் தலையிடுவதுடன், சட்ட நடவடிக்கைகளைத் தடை செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவர் மீதான பல ஊழல் மற்றும் குற்ற வழக்குகளை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் அமைச்சராகத் தொடர்வது, நேர்மையான விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில செயல்பாடுகளுக்கும் இடையூறை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நீக்கியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஆளுநரின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாடு மட்டுமின்றி ஒன்றிய அளவிலும் இச்செயலுக்குக் கடும் கண்டனங்கள் வந்தன.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநரின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாலேயே 5 மணி நேரத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று என்று சட்டவல்லுநர்கள் கூறுகிறார்கள்.


