அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9 பி என்ற அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார் மோடி. அதற்கு முன்னதாக, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் எம்கியூ-9பி ரக ஆளில்லா விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் 15 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
கடல்சார் கண்காணிப்பு, அதிக உயரத்தில் பறக்கும் திறன், ஏவுகணைகளைச் சுமந்து சென்று இலக்குகளைத் துல்லியமாக தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை எம்கியூ-9பி கொண்டுள்ளது.
கடற்படைக்கு 14 விமானங்களும், விமானப்படை மற்றும் இராணுவத்துக்கு தலா 8 விமானங்களும் வாங்கப்பட உள்ளது.
இதில் மிகப்பெரிய ஊழல் உள்ளது என காங்கிரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரசுக்கட்சியின் ஊடகத் தொடர்பாளர் பவன்கெரா பொதுவெளியில் எழுப்பியுள்ள கேள்விகள்…..
ட்ரோன் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை?
தற்போதைய நிலவரப்படி, பிரிடேட்டர் டிரோன் ஒவ்வொன்றின் விலை தோராயமாக ரூ.812 கோடி. 31 டிரோன்கள் வாங்க ரூ.25,200 கோடியை இந்தியா செலவழிக்க வேண்டும். இது, மற்ற நாடுகள் இதே டிரோன்கள் வாங்கியதை விட 4 மடங்கு அதிகமாகும். மற்ற நாடுகளை விட இந்தியா ட்ரோன்களுக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும்?
இந்த ஆளில்லா விமானங்களின் விலை உயர்ந்து வருவதற்கு விமானப்படை ஆட்சேபனை தெரிவித்தபோது, ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசரம் என்ன?
விமானப்படை 18 ஆளில்லா விமானங்களை மட்டுமே கேட்டது,
எதற்காக 31 ஆளில்லா விமானங்கள் வழங்கப்படுகின்றன?
– மேக் இன் இந்தியா மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்ற இந்தியா என்று கூறியது என்ன ஆனது?
– 8-9% தொழில்நுட்பப் பரிமாற்றத்தை மட்டும் ஏன் ஒப்புக்கொண்டீர்கள்?
– தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளுடன் ஜெனரல் அணுவின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு என்ன தொடர்பு?
இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.