காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
சட்டமன்றத்தில் பேசும்போது, எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்காது என்றும் உறுதியாகப் பேசினார்.
இந்நிலையில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் இரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,“காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதல்வரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. விவசாயம் காப்போம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.