கடைசி நேரத்தில் சந்திப்பை இரத்து செய்த மோடி – ஓபிஎஸ் இபிஎஸ் அதிர்ச்சி

ஏப்ரல் 8 அன்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். அவர்களோடு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர்.

பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்து மைசூர் செல்வதற்காக மோடி இரவு 7.35 மணிக்கு விமானநிலையம் வந்தார். அங்கு அவர் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பிறகு முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலினை 20 நிமிடம் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்துப் பேசினார்.

அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேச மறுத்து விட்டார். இவர்கள் யாரும் பிரதமர் மோடி தங்கியிருக்கும் அறைக்கு அருகே வரவேண்டாம். விமான நிலையத்தில் புறப்படும் இடத்தில் காத்திருக்கும்படி கூறிவிட்டனர்.

இதன் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அவர்கள் தனித்தனியாக பேச தலா 5 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது, கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அமைதியாகக் காத்திருந்தனர்.

அதன்பின், மைசூர் செல்வதற்காக மோடி வெளியில் வந்தார். அதிமுக மற்றும் பாஜக தலைவர்களைப் பார்த்து கும்பிட்டு வணக்கம் சொல்லிவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.

மோடியின் இந்தச் செயல் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக தலைவர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசாமல் சென்றது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response