இரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி – டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்குவதற்காக இந்தியா மீது 25 விழுக்காடு அபராத வரியை விதித்திருந்தார். இந்தியாவின் கொள்முதல், உக்ரைனுக்கு எதிரான இரஷ்யாவின் போரை தூண்டுவதற்கு உதவுவதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய கொள்முதல் நிறுவனங்கள் இரஷ்யாவிடம் இருந்து கொள்முதலைக் குறைக்கத் தொடங்கின.இதன் எதிரொலியாக கடந்த மாதம், அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து இந்தியா மீதான வரிகளை 18 விழுக்காடாக அமெரிக்கா குறைத்தது.இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹார்மோஸ் நீரிணைப் பகுதியை கப்பல்கள் கடக்க ஈரான் தடைவிதித்துள்ளது.அந்தவழியாகச் சென்ற பல எண்ணெய்க் கப்பல்களை ஈரான் தாக்கியது.இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

இதன் எதிரொலியாக இரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு இந்தியாவிற்கு தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

அதிபர் டிரம்பின் நிகழ்ச்சித் திட்டங்களின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த அளவை எட்டியுள்ளது.உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் தொடருவதற்கு உதவும் வகையில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் இரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிகமாக 30 நாட்கள் அனுமதி அளிக்கிறது.இரஷ்யாவின் கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு மார்ச் 5 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அங்கீகரிக்கப்படும்.இந்தக் குறுகியகால நடவடிக்கை இரஷ்ய அரசிற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது.
ஏனெனில்,இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது.இந்தியா அமெரிக்காவின் ஒரு அத்தியாவசிய கூட்டாளி.மேலும் இந்தியா அமெரிக்காவிடம் எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.இந்த இடைக்கால நடவடிக்கையானது உலகளாவிய எரிசக்தியை முடக்கி வைத்திருப்பதற்காக ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அரசின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதி கொடுப்பதற்கு அமெரிக்கா யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய அரசை காங்கிரசு கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரசுக் கட்சியின் தலைவர் கார்கே தனது சமூக வலைதளப் பதிவில்….

எப்ஸ்டின் பைல்ஸ் மற்றும் அதானி வழக்கில் பிரதமர் மோடி மிரட்டப்படுகிறார் என்பதால் இந்தியாவின் மூலோபாய சுயாட்சி மற்றும் தேசிய இறையாண்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.
30 நாட்களுக்கு ஒரு விலக்கு என்ற முறையில் இரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்காவின் அறிவிப்பு மோடி அரசு தொடர்ந்து ராஜதந்திர இடத்தை விட்டுக்கொடுக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. வர்த்தக உடன்பாடு முதல் கச்சா எண்ணெய் வரை அனைத்தையும் மோடி அடகு வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இரஷ்யாவின் எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்க விலக்கு அளித்துள்ளது பிரதமர் மோடியின் மூலோபாய எண்ணெய் ராஜதந்திரத்தின் வெற்றியாகும் என பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில்….

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா மூலோபாய நிதானத்துடனும் மூலோபாய தெளிவுடனும் செயல்படுவதை இராகுல்காந்தியும் காங்கிரசும் வெறுக்கின்றது.
எண்ணெய்ப் பற்றாக்குறை குறித்த போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் பீதியை ஏற்படுத்த விரும்பிய காங்கிரசுக்கட்சி மற்றும் இராகுல்காந்திக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகும்.பிரதமர் மோடியின் கீழ் இந்தியாவின் மூலோபாய எண்ணெய் ராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

இந்திய அரசின் முடிவை டிரம்ப் எடுக்குமளவுக்கு விட்டுக்கொடுத்திருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response