கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம்.
தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு அதை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்முற்றம் திடலில் கார்த்திகை வாசம் என்ற மலர்க்கண்காட்சியை ஆரம்பித்துள்ளது.
18.11.2022 அன்று கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாக இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற தொடக்கவிழாவில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. இரேனியஸ் செல்வின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ச. ரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதன்போது நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 27ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் மாணவர்களுக்கும் ஆலயங்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
தொடக்கவிழாவில் ஏராளமான பெண்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.