சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர் எ.வ.வேலு பேசினார் என்பது குற்றச்சாட்டு.
இந்நிலையில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது…
பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக பெரும்பாலான மக்கள் 3 விதமான கருத்துகளைத் தெரிவித்து உள்ளனர். சந்தை மதிப்பில் நிலத்திற்குப் பணம் தர வேண்டும். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடத்தை விமான நிலையத்தைச் சுற்றியே வழங்க வேண்டும். நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தோம். அதனால்தான் அவர், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மார்க்கெட் விலையில் 3.5 மடங்கு பணம், விமான நிலையம் அருகிலேயே வீடு கட்டுவதற்கு இடம், அதே போல் நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டு உள்ளனர். எதிர்ப்பு தெரிப்பவர்களிடம் சம்மதத்தைப் பெறுவோம்.
சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்கும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 8 வழிச்சாலைத் திட்டம் கொண்டு வந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்திற்கு நாங்கள் எதிரி கிடையாது. பாதிக்கப்படுபவர்களை உரிய முறையில் அழைத்துப் பேச வேண்டும். அவர்களுக்குச் சந்தை மதிப்பில் இழப்பீடு தர வேண்டும் என்றார்.
நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. எனவே சாலைகளை விரிவுப்படுத்ததான் வேண்டும். அதற்காக நிலத்தைக் கையகப்படுத்தத் தான் வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனாலும் அரசு அதில் கொள்கை முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது.
இந்தத் திட்டத்தை நான் வேண்டும் என்று சொல்வதாக சில செய்திகள் வருகிறது. நான் எங்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும். இந்தத் திட்டத்தை தி.மு.க. அப்போது எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்று சொல்கிறீர்கள். நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியில், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது அதனால் சாலைகளை விரிவுபடுத்தத்தான் வேண்டும், எட்டுவழிச் சாலைத் திட்டத்தை உச்சநீதிமன்றம் நிறைவேற்றச் சொல்கிறது, நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி இல்லை ஆகிய கருத்துகள் எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் என்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.