அடுத்த குடியரசுத்தலைவர் யஷ்வந்த்சின்கா?

இந்திய ஒன்றியத்தின் அடுத்த குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடித்து வருகின்றன.

தற்போதைய குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி நிறைவு அடைகிறது. அடுத்த குடியரசுத்தலைவர் ஜூலை மாதம் 25 ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டது.

இதன்படி அடுத்த மாதம் 18 ஆம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கத் தீவிர ஆலோசனை நடந்து வந்தது. நேற்று மாலை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடந்தது.

அதில், பிரதமர் மோடி,ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்,
நேற்று இரவு பா.ஜ.க. கூட்டணி சார்பில் வேட்பாளரை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் இறந்து விட்டனர்.அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த திரவுபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் திரவுபதி முர்மு பெற்றார்.

ஒடிசாவைச் சேர்ந்தவர் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத்தலைவர் என்ற சிறப்பைப் பெறுவார்.

இந்தத்தேர்தலில், எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தேசியவாத காங்கிரசுத் தலைவர் சரத்பவார் நேற்று கூட்டி இருந்தார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரசு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், தி.மு.கவைச் சேர்ந்த திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசு மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசிய மாநாடுக் கட்சியின் ஹஸ்னயின் மசூதி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் என்.கே.பிரேமசந்திரன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவை (84) நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை சரத்பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ஆம் ஆண்டு பதவி விலகி அரசியல் களத்தில் குதித்தார். ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக, ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக, பா.ஜ.க.வின செய்தித் தொடர்பாளராக, திரிணாமுல் காங்கிரசுக் கட்சியின் துணைத்தலைவராக பணியாற்றி உள்ளார். நேற்றுதான் அவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. அதுவே நடந்துள்ளது.

யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராகப் பணியாற்றி உள்ளார். வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதியமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியைவிட எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சற்றே அதிகம் இருப்பதால் யஷ்வந்த்சின்காவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response