மேகதாது அணை கட்ட கர்நாடகா கொடுத்த விண்ணப்பம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு நேற்று பிற்பகல் டெல்லியில் உள்ள ஜல்சக்தி பவனில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தது.

இக்குழுவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தம்பித்துரை கு.செல்வப் பெருந்தகை, கோ.க.மணி, வைகோ, எஸ்.எஸ்.பாலாஜி, நயினார் நாகேந்திரன், இராமசந்திரன், பி.சண்முகம், எம்.எச்.ஜவஹிருல்லா, தி.வேல்முருகன், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில்,

ஒன்றிய அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என அவரிடம் வலியுறுத்தினோம். அது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், மேகதாதுவில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவால் காவிரியின் குறுக்கே மேகதாது உட்பட எந்த புதிய அணையையும் கட்ட முடியாது என்று அவர் திட்டவட்டமாக உறுதியளித்து இருக்கிறார். இது, தமிழகத்திற்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. அடுத்த காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்பட்டால் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டும், அணை கட்டுமானத்துக்கான திட்ட அறிக்கையையும் 2019 ஆம் ஆண்டு ஜூனில் ஒன்றிய அரசிடம் கர்நாடகா அரசு விண்ணப்பம் அளித்திருந்தது. அதனை பரிசீலனை செய்த ஒன்றிய அரசு, திட்ட அறிக்கை முழுமையாக இல்லை என அப்போது தெரிவித்தது.

இந்நிலையில், ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேகதாது விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ஒன்றிய வனத்துறை மற்றும் காவிரி ஆணையம் இறுதி செய்யவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கர்நாடக அரசு வழங்கிய விண்ணப்பம் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருந்து நீக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Response