ஓடி ஒளிந்த ராஜபக்சே தேடித்திரியும் மக்கள் – பதட்டத்தில் கொழும்பு

இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியானதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அங்கு பதட்டநிலை நீடிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வநதனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது.

கொழும்பு உள்பட பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள், மேயர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவும் வன்முறை நீடித்தது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதில், நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் நடந்த கலவரத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இமதுவா பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமாரின் வீட்டை வன்முறையாளர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த அவர், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு இறந்தார்.

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக நேற்றிரவு அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்ட அறிவிப்பில், நேற்றிரவுடன் முடிந்த அவசரநிலை பிரகடனம் நாளை (மே 11) காலை 7 மணி வரை மீண்டும் (3வது முறை) நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் அந்த சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, வேறு ஒரு ரகசிய இல்லத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறத் திட்டமிட்டு இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. கலவரத்துக்குக் காரணமான ராஜபக்சே, தப்பிச் செல்லும்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அவரது நடவடிக்கைகள் இரகசியமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Response