ராஜபக்சே தூண்டிவிட்ட வன்முறை அவர் வீட்டையே எரித்தது – அவரைக் கைது செய்யக் கோரிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால்,சிங்கள அரசுக்கு எதிராக சிங்களப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியிலும் மகிந்த ராஜபக்சேக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் பதவியிலிருந்து விலக மகிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் எனவும் கூறப்பட்டது. இதற்கேற்றார் போல், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால கூட்டணி அரசுக்கு தலைமை ஏற்க வருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சே பதவி விலகுவார் என இலங்கை மக்கள் நேற்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், மகிந்தாவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் பேருந்துகள் மூலமும் பேரணியாகவும் குவிந்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பாக குவிந்த சுமார் 3000 ஆதரவாளர்கள் முன்பாக பேசிய மகிந்த ராஜபக்சே, ‘‘எதிர்ப்புகள், போராட்டங்களைப் பார்த்துப் பழகிவிட்டேன். எதுவும் என்னைத் தடுக்க முடியாது. எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நான் அனுபவம் வாய்ந்தவன். இலங்கை மக்களுக்கு எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’’ என்று பேசினார்.

இதைக் கேட்டு உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர்களுடன் வந்திருந்த குண்டர்கள் கம்பு, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை என ஆயுதங்களுடன் சென்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஒட்டியும், காலி முகத்திடலிலும் போராட்டம் நடத்தி வந்த மக்களைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 78 பேர் படுகாயமடைந்தனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மகிந்தா ஆதரவாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள், அவர்கள் வந்த பேருந்தையும் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைந்தெறிந்தனர்.

சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வன்முறை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும், வன்முறையால் எந்த வெற்றியும் கிடைக்காது என்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிடையே, கொழும்பு புறநகரான நிடம்புவா பகுதியில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி அதுகோரலா சென்ற கொண்டிருந்த காரை சிலர் வழிமறித்துள்ளனர். பயந்து போன அவர் தனது துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டுள்ளார். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்ததால் பயந்து போன எம்பி அந்த இடத்தில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த கட்டிடத்தில் தஞ்சமடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போராட்டக்காரர்களுக்குப் பயந்து அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவத்தில் எம்பியின் பாதுகாப்பு அதிகாரியும் பலியாகி உள்ளார்.

இந்நிலையில், வன்முறையால் நிலைமை விபரீதமான நிலையில், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயவிடம் வழங்கினார். இதன் மூலம் மக்களின் ஒருமாத கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதே போல அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சே பதவிவிலகியதைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள்,
அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட பலரது வீடுகளைப் போராட்டகாரர்கள் சூறையாடி தீ வைத்ததால், இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

மகிந்தா பதவி விலகியதை அடுத்து, குருணாகல் நகர பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் கொழும்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், குருணாகலில் உள்ள மகிந்த வீட்டை தீவைத்து எரி்த்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மக்கள், உள்ளே செல்ல பலமுறை முயன்றனர். பொதுஜன பெரமுனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த்தின் வீட்டையும் சிலர் தீ வைத்து எரித்தனர். புத்தளம் பகுதியில் உள்ள எம்பியின் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. குருணாகல் நகர மேயர் வீடும் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதே போல பல அமைச்சர்களின் வீடுகள், ஆளும்கட்சி எம்பிக்கள் வீடுகளின் மீதும் பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இதனால் அரசியல் தலைவர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்த பேட்டியில், மகிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே வன்முறையை உருவாக்கி உள்ளனர். பதவி போவதால் அதற்குக் காரணமான பொதுமக்களைப் பலிகடாவாக்கத் துணிந்துள்ளனர். அவரைக் கைது செய்ய வேண்டும் என்றனர்.

Leave a Response