பதவி விலகினார் மகிந்த இராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ராஜபக்சே சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரைப் பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி மக்கள் 33 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல தரப்பிலும் நெருக்கடி முற்றிய நிலையில், அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், `இடைக்கால அரசு அமைவதால் நாட்டின் நெருக்கடி நிலைக்குத் தீர்வு காணப்படும் என்றால் தான் பதவி விலகத் தயார் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால், ராஜபக்சே விரைவில் பதவி விலகுவார் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் நடந்து வரும் போராட்டத்துக்குப் பணிந்து பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபாயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது ராஜினமா செய்துள்ளார்.

மகிந்த ராஜபக்சே பதவி விலகளைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள், இலங்கை அரசு எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்த மோதலால் கொழும்பில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது பற்றி அடுத்தகட்ட ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசு அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Response