மோடி ஆட்சியில் ஒவ்வொருநாளும் 350 பேர் இந்திய குடியுரிமையைத் துறக்கின்றனர் – அதிர்ச்சித் தகவல்

வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் 9 இலட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்று அங்கேயே செட்டில் ஆகியுள்ளனர்.

இந்தியாவில் வசிக்கும் செல்வந்தர்கள் பலர் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடு சென்றுவிடுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் தொழிலில் பாதுகாப்பின்மை என்று சொல்லப்படுகிறது.

படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களில் 70 முதல் 80 விழுக்காட்டினர் இந்தியா திரும்பவில்லை. அவர்களுக்கு அங்கேயே வாழ வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் அவர்கள் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிடுகிறார்கள்.

இந்தியாவில் வேலையின்மை காரணமாக, பஞ்சாப், டெல்லி, அரியானாவில் உள்ள பெரும்பாலான மக்கள், கனடாவுக்குக் குடிபெயர்கின்றனர். பீகார், கேரளா போன்ற மாநில மக்கள், வேலைவாய்ப்பைத் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஒவ்வொரு நாளும் 350 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட அவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே செட்டிலாகிவிடுகின்றனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஏறக்குறைய ஒன்பது இலட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர்.

வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மொத்தம் 1,33,83,718 இந்தியர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள் தற்போது 106 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களாக மாறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், அதிகபட்சமாக 1.44 இலட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர்.(மோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டு)

2016 ஆம் ஆண்டில் 1.41 இலட்சம் பேரும், 2017 ஆம் ஆண்டு 6.08 லட்சம் இந்தியர்களும் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டனர். இவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு முதல், இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டவர்களில் 82 விழுக்காட்டினர் மேற்கண்ட நான்கு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ளனர்.

2017 முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில், 2,174 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு சீனாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த நேரத்தில், 94 இந்தியர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். நேபாள அரசு 134 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது.

மறுபுறம், உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2016 முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் மொத்தம் 5,891 வெளிநாட்டினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

2018 முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்து, சீக்கியர், சீக்கியர்களிடமிருந்து குறைந்தது 8,244 குடியுரிமை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், இவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜெயின் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 10,635 இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதில் பாகிஸ்தானில் இருந்து 7,306. ஆப்கானிஸ்தானில் இருந்து 1,152 ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Response