அமிதாப்பச்சன் செய்ததை ரஜினி செய்வாரா? – மக்கள் கேள்வி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வந்தனர். அதில் 350 விவசாயிகளின் கடனை வங்கியில் செலுத்தி அவர்களைத் தற்கொலையில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப்பிரேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் வங்கிக்கடனையும் அடைத்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

உத்தரப்பிரேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் வங்கியில் வாங்கியிருந்த வேளாண் கடனை வங்கியில் நான் திருப்பிச் செலுத்தி இருக்கிறேன். இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.4.05 கோடியாகும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட 70 விவசாயிகளை மும்பைக்கு அழைத்து வந்து என்னைச் சந்திக்கச் செய்து உதவிகளைச் செய்தேன்.

வறுமையில் வாடும் விவசாயிகளை மீட்கவும், அவர்களின் சுமையைக் குறைக்கவும் என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 350 விவசாயிகள் கடன் அடைக்கப்பட்டது. இப்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,398 விவசாயிகள் கடன் நிலுவைத் தொகை அடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மனதில் அமைதியு ஏற்படும், விருப்பமும் நிறைவடையும். இவ்வாறு நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சனின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அமிதாப்பின் இந்தச் செயலைப் பின்பற்றலாமே, விவசாயிகள் செழிப்பாக இருந்தால் ஒட்டுமொத்த நாடும் நன்றாக இருக்குமே, ஒரு படத்துக்கு ஐம்பது கோடி சம்பளம் வாங்கும் ரஜினிக்கு இதுபோல் உதவி செய்வது எளிதுதானே என்கிற கருத்துகள் சமூக ஊடகங்களில் வருகின்றன.

Leave a Response