புதிய வேளாண்சட்டங்கள் இரத்து – இரண்டு அவைகளிலும் நிறைவேறியது

பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

நவம்பர் 19,2021 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றாலும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடருவோம் எனத் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

அதன்படி 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவை ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி வலியுறுத்தினார்.ஆனால் பாஜக அதற்கு உடன்படவில்லை, எனினும் உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா பின்னர் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மசோதா அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

விவசாய சட்டங்களை இரத்து செய்யும் மசோதா, குரல் வாக்கெடுப்புடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மறுத்தார்.

இதுகுறித்து காங்கிரசு மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ‘‘அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் விவாதம் நடத்த அரசு மறுப்பது ஏன்’’ எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Response