அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் மரணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர் மதுசூதனன். 2010 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியில் இருந்தவர் மதுசூதனன். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மதுசூதனன் இன்று பிற்பகல் 3.42 மணிக்கு காலமானார்.இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response