தம் இளமைக்காலம் முதல் இறுதி மூச்சு வரை, தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டு விடுதலைக்காகப் பேசியும் எழுதியும் போராடியும் தளைப்பட்டும் வந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
அவர் மறைந்து 26 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
அதையொட்டி அவருடைய மகனும், தந்தைவழியில் தளராது போராடிக்கொண்டிருப்பவருமான பொழிலன் எழுதியுள்ள பதிவு…..
1995
சூன் 11 ஆம் நாள்..
பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் மறைவுற்று 26 ஆண்டுகள் கடந்துவிட்டன..
தமிழ் ஊழிக் காலம் தந்திருக்கிற தலைமைகள் பலரும் துறை சார்ந்த சிறப்புக்குரியவர்களே..
ஆனால் பாவலரேறு ஐயாவின் தனிச்சிறப்பு பல நிலைகளில் அளாவியவை..
புரட்சிப் பாவலர் பாவேந்தரின் பாவுணர்வும் சொல்லாட்சியும் அவரைப் போலவே அவரினும் பல நிலைகளில் சிறப்போடும் பாவலரேறு ஐயாவின் படைப்புகள் தமிழ் மொழி இன மக்களை எழுச்சி கொள்ள வைத்தன..
1959 – தம் 26 ஆம் அகவை தொடங்கி,
தன் தென்மொழியை உயிர்த் தொண்டெனவே நடத்தி வந்தார்..
தென்மொழி மீது வழக்கு, இதழ் மீது தடை.. இவற்றை யெல்லாம் கடந்து தென்மொழியைத் தம் இறுதிக் காலம்வரை நடந்தி வந்தார்..
தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு அவரின் எல்லை கடந்த உழைப்பின் விளைவுகள்..
இடையிடையே எண்ணற்ற இலக்கியப் படைப்புகள்.. திருக்குறளுக்கு மெய்ப்பொருள் உரை.. ஆயிரக்கணக்கில் சொற்பொழிவுகள்..
தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ்நாடு விடுதலைக்காக மூன்று மாநாடுகள் நடத்திச் சிறை சென்ற தென்மொழிப்படையின் தலைவர் ஐயா அவர்கள்..
எல்லாவற்றுக்கும் மேலாக 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, மிசா, தடா எனும் அடக்குமுறைச் சட்டக் கொடுமைகளால் அவரின் தமிழ் மொழி இன உணர்வுகளை அரசால் அசைக்க முடியவில்லை..
தமிழ்நாட்டின் விடுதலையே தம் கொள்கை இலக்குச் செயற்பாடென வாழ்ந்த அப் பெருந்தகை, தமிழீழ ஆதரவுக்காகவும் போராடிப் பலமுறை சிறைபட்டிருந்தார்.. வீரமகள் தனு வுக்கு நூறாசிரியப் பாடல் ஒன்றை எழுதி வரலாற்றுச் சிறப்புசிறப்புச் செய்தார்..
பாவலரேறு படித்தறியப்பட வேண்டியவர் மட்டுமல்லர்.. பின்பற்றிச் செயல்படவேண்டிய வழிகாட்டி..
ஆம்..
தமிழ் இளைஞர்களுக்குப் பாவலரேறு தமிழ்த் தேசத்தின் தந்தை.
இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.