பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி

05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர் ச.சு.பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. முனைவர் மு.இளமுருகன் வரவேற்புரையாற்றினார்.முனைவர் மா.பூங்குன்றன் தொடக்கவுரையும், பொழிலன் நூல் அறிமுகவுரையும் ஆற்றினர். சு.பழனிராசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முனைவர் வி.பாரி நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் பாவலரேறுவின் நூல்களை அறிமுகப்படுத்தி பழ.நெடுமாறன் ஆற்றிய உரை…..

பாவலரேறுவின் எழுத்தாக்கங்கள் அனைத்தையும் அவரது வழித்தோன்றல்களான பூங்குன்றன், பொழிலன், குணத்தொகையன், பிறைநுதல், அரசி ஆகியோர் குழுவாக இயங்கி மூன்றாண்டுகள் அரும்பாடுபட்டுத் தொகுத்து எழுத்தடைவுகள் என்ற பெயரில் 16 தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். ஐயாவின் நண்பர்களும், அவரைப் பின்பற்றியவர்களும் இதற்குத் துணை நின்றனர்.

தமிழர் வரலாற்றில் முத்திரை பொறிக்கத்தக்க இத்தொகுப்புகள் வருங்காலத் தலைமுறையினருக்கு ஐயாவின் அருந்தொண்டினை மட்டுமல்ல, அவர் வாழ்ந்த கால தமிழகத்தின் தாழ்ந்த நிலையையும் இந்தச் சூழலில் ஐயா அவர்கள் எத்தகைய போராட்ட வாழ்வை ஏற்றிருந்தார் என்பதையும் எடுத்துக்கூறி அனைவருக்கும் உணர்வூட்டும் என்பதில் ஐயமில்லை. இந்த அரிய முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறேன்.

1959 ஆம் ஆண்டு தென்மொழி தொடங்கப்பெற்று 1995 வரை 37 ஆண்டுக் கால பாவலரேறுவின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இத்தொகுப்பின் மூலம் ஓரளவு நாம் உணர முடியும்.

தென்மொழி இதழ் அல்ல, அதுவொரு இயக்கம். தமிழ்மொழி – தமிழர் – தமிழ்நாடு ஆகியவற்றை ஆதிக்கப்பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட தங்களை ஒப்படைத்துக்கொண்ட தோழர்களின் போர்ப் பாசறையாகத் தென்மொழி திகழ்ந்தது.

இப்பாசறையில் பயின்ற தோழர்கள் தமிழகமெங்கும் தமிழுணர்வைப் பரப்பும் தொண்டிற்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர். இன்றுவரையிலும் அவர்கள் சீரிய தொண்டு தொடர்கிறது.

தனியொரு மனிதர் தனது எழுத்து வன்மையினால் தமிழகமெங்கும் தமிழுணர்ச்சிக் கனலை மூட்டுவதற்கு ஏற்ற கருவியாகத் தென்மொழி திகழ்ந்தது.

தென்மொழி ஒரு இதழ் அல்ல. அதுவே ஒரு இயக்கமாகத் திகழ்ந்தது.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பெருஞ்சித்திரனார் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். அதற்காகவே கடலூரில் ஆற்றிய பணியைத் துறந்து புதுச்சேரியில் குடியேறினார். நாள்தோறும் பாவேந்தரைச் சந்திக்க அவர் தவறுவதில்லை.

கனிச்சாறு என்ற தலைப்பில் ஐயாவின் முதல் கவிதைத் தொகுதி கையெழுத்துப் பிரதியாக இருக்கும்போதே அதற்குப் பாவாணர் மதிப்புரை எழுதினார். பாவேந்தருக்கு அந்நூலை பாவலரேறு படைத்தார்.

பாவேந்தரிடம் அவர் கொண்டிருந்த ஆழமான மதிப்பினை இது புலப்படுத்துகிறது.

பாவேந்தர் அவர்களும் பாவலரேறு மீது மிக்க அன்பு கொண்டிருந்தார். அவரின் கொய்யாக் கனி நூலுக்கு அவரைக் கேட்காமலேயே பாவேந்தர் மதிப்புரைப் பாடல் ஒன்றையும் எழுதி, அவருடைய பதிப்பகத்தின் மூலமாகவே அச்சுக் கட்டணமின்றி வெளியிட்டார்.

வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம். ஐயாவின் கொள்கை உணர்வில் ஊறிய பிள்ளைகள். போராட்ட வாழ்க்கையிலும் சிறிதும் கலங்காது தனது பிள்ளைகளுக்கு உணவு ஊட்டினாரோ இல்லையோ தமிழுணர்வை ஊட்டி வளர்த்தார். அவர் குடும்பம் முழுவதும் இன்றுவரையிலும் ஐயாவின் பாதையில் தொண்டாற்றுகிறார்கள். குடும்பத்தினரோடு ஐயா கழித்த நாட்களைவிட, சுற்றுப் பயணத்திலும், சிறைகளிலும் கழித்த நாட்களே அதிகம்.

அதனால்தான் கவிஞர் இன்குலாப் பின்வருமாறு எழுதினார்-

பதினெட்டு முறை நீங்கள்
சிறைப்பட்டபோது
பதினெட்டு முறை
என்
தமிழும் சிறையில்

மிசா, தடா போன்ற கொடிய சட்டங்களின் கீழும் மற்றும் பல தடைச் சட்டங்களின் மூலமும் பாவலரேறு பலமுறை சிறை சென்றார். அவருடைய இளைய மகன் பொழிலனும் இளம் வயதில் 9 ஆண்டுக் காலம் சிறையில் வாடினார். இவ்வளவு துன்பங்களுக்கும் நடுவேயும் ஐயாவின் குடும்பத்தினர் அவர் ஊட்டிய தமிழுணர்வை ஒருபோதும் மறக்கவில்லை. தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்றி வருவது பெருமைக்குரியதாகும்.

எதைக் கண்டும் யாரைக் கண்டும் பாவலரேறு ஒருபோதும் அஞ்சியதில்லை. அடுக்கடுக்கான அடக்குமுறைகளைச் சந்தித்த போதும் நெஞ்சை நிமிர்த்தி நின்றவர் அவர்.அப்போதைய தலைமையமைச்சர் இராசீவ்காந்தி இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு முயன்ற போது,கொதித்தெழுந்த பாவலரேறு அவர்கள் “இட்ட சாபம் முட்டுக!” என்ற தலைப்பில் கவிதை ஒன்றைப் படைத்தார். மிகக் கடுமையான வார்த்தைகளைப் பெய்து எழுதப்பட்ட அக்கவிதையின் இறுதிப் பகுதியை இங்கே வாசிக்க விரும்புகிறேன்.

இடும்பைப் பிறப்பே ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக!சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க

இப்பாடல் 1988 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும். மூன்று ஆண்டுகள் கழித்து எழுதியது போலவே இராசீவ்காந்தியின் சாவு நிகழ்ந்தது.

இந்தப் பாடல் எப்படியோ இந்திய உளவுத் துறை(I.B.) அதிகாரிகளுக்கு தெரிந்தது. அவர்கள் உடனடியாக தென்மொழி அலுவலகத்திற்குச் சென்று ஐயாவைப் பார்த்து இப்பாடல் குறித்து கேள்வி எழுப்பினர்.

எதைக்கண்டும் அஞ்சா நெஞ்சினரான ஐயா அவர்கள் “நான் தமிழ்க் கவிஞன். எழுதினால் எழுதியபடி நடக்கும்” என்று கூறியிருக்கிறார். அதற்குமேல் பேச முடியாத அதிகாரிகள் என்னை வந்து பார்த்தனர். அவர்கள் பேச்சிலேயே மிரட்சி தெரிந்தது.

“அவர் ஒரு மாபெரும் கவிஞர்; அறிஞர். அவர் எழுதினால் எழுதியபடி நடந்தே தீரும். அந்த நாளில் புலவர்கள் கொடுங்கோலர்களுக்கு எதிராகப் பாடுவதை அறம் பாடுதல் என்பார்கள். அவர் பாட்டில் கூறியபடி அது நடந்தே தீரும். அதைப்போல மாபெரும் கவிஞரான ஐயா அவர்கள் இராசீவ்காந்திக்கு எதிராக அறம் பாடினார். அது அப்படியே நடந்துவிட்டது.

“எதற்காக அவரைப் போய் தொந்தரவு செய்தீர்கள். உங்களைப் பற்றியும் ஏதாவது பாடப்போகிறார். எச்சரிக்கையாக இருங்கள்” எனக் கூறினேன். ஏற்கெனவே மிரண்டு போயிருந்தவர்கள் மேலும் பயந்து வெளியேறினார்கள். நானும் என்கூட இருந்த தோழர்களும் பொங்கியெழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தோம்.

1990 ஆம் ஆண்டு சூன் 9,10 நாட்களில் தஞ்சையில் தமிழர் தேசிய இயக்கத்தின் மூன்றாவது மாநில மாநாட்டை நடத்தத் திட்டமிட்டோம். இம்மாநாட்டில் தன்னுரிமைப் பிரகடனம் செய்யப்போவதாக அறிவித்தோம். தமிழக அரசு மாநாட்டைத் தடை செய்தது. சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த பாவலரேறு, சாலையார், சாலினியார், பொழிலன், தெலுங்கு தேச விடுதலை அமைப்புத் தலைவரான டாக்டர் மித்ரா உட்பட நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டோம். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சி.முருகேசன், பொதுச் செயலாளர் வியனரசு, எனது உதவியாளர் மூர்த்தி ஆகியோர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். எங்களைக் கைது செய்த போது காவல்துறை வாகனத்தில் தோழர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். எப்போதும் நான் இறுதியாகத்தான் வாகனத்தில் ஏறுவது வழக்கம். வரிசையாக வந்த தோழர்கள் நடுவில் பேரா.அருளி அவர்கள் வாகனத்தில் ஏறுவதைப் பார்த்தபோது தடுத்து நிறுத்தினேன். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவர் அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும், பாவலரேறு மருமகனான அவரும் கைதாவதற்குத் துணிந்தார். ஒருவாறு அமைதிப்படுத்தி அவரைத் திருப்பியனுப்பினோம்.

கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தார். பாவலரேறு, சாலையார், சாலினியார் ஆகியோரிடம் பேச வேண்டும் என்று கூறினார். அவர்களுடன் நானும் சென்றேன்.

“உங்கள் மூவரையும் கைது செய்யவேண்டாம் என அரசிடமிருந்து எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் மூவரும் போகலாம்” என்றார். எனக்கு அது சரியெனப்பட்டது. “ஐயா! நீங்கள் மூவரும் எதற்காகக் கைதாகவேண்டும்? போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றியும் கூறுகிறேன். தயவு செய்து நீங்கள் சென்னைக்குத் திரும்புங்கள்” என வேண்டிக்கொண்டேன்.

ஆனால், அவர்கள் மூவரும் என் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். பிடிவாதமாகச் சிறைக்கு வந்தனர். சிறையில் அவர்கள் தோழர்களுக்குத் தமிழின் சிறப்பு குறித்தும், தமிழனின் பெருமைமிக்க வரலாறு குறித்தும் வகுப்புகள் நடத்தினர்.

திருச்சி சிறையில் தாங்கள் கழித்த அந்த 15 நாட்கள் என்றும் மறக்க முடியாதவையாகும். பின்னர்,அனைவரும் பிணையில் விடுதலைப் பெற்று வெளியே வந்தோம்.

21.01.1993 அன்று தடாச் சட்டத்தின் கீழ் மதுரையில் நானும், சென்னையில் பாவலரேறு, பொழிலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டோம். அவர்கள் இருவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் என்னைத் தடா நீதிமன்ற நீதிபதி சித்திக் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினர்.

முதலில் எனக்குப் பிணை வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. அவர்களை அழைத்து வருவதற்காகச் சென்னை சிறைக்குச் சென்றேன்.

ஐயா அவர்கள் திருக்குறளுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் எழுதிய உரைகளை ஒப்பிட்டு குறளுக்கு மெய்யான உரையை ஐயா எழுதிக்கொண்டிருந்தார். எழுதி முடித்துவிட்டீர்களா? என்று நான் கேட்டேன். இல்லை, விரைவில் முடித்துவிடுவேன் என்று ஐயா கூறியபோது “இந்த உரையை எழுதி முடிக்கும் வரை பொறுத்திருந்து உங்களைப் பிணையில் எடுத்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டேன்” என நான் கூறினேன்.ஐயா அவர்களோ நான் விளையாட்டாகக் கூறினேன் என்பதை புரிந்துகொள்ளாமல் “இல்லையில்லை சீக்கிரம் முடித்துவிடுவேன்” எனக் கூறினார். சிறை அதிகாரிகள் உட்பட அனைவரும் சிரித்தனர்.

ஆனால், வெளியே வந்தவுடன் ஐயா சந்திக்கவேண்டிய போராட்டக் களங்கள், கூட்டங்கள் போன்ற எத்தனையோ நிகழ்ச்சிகள் குறுக்கிட்டன. 240 குறளுக்கு மட்டுமே அவர் மெய்ப்பொருள் உரையை எழுதியிருந்தார். முழுமையாக 1330 குறளுக்கும் அவர் எழுதியிருந்தால் தமிழுக்கு ஒரு மாபெரும் கருவூலம் கிடைத்திருக்கும்.

ஆனாலும், பிற்காலத்தில் தம்பி பொழிலன் அவர்கள், தனது தந்தை தொடக்கிய பணியை நிறைவு செய்யும் வகையில் திருக்குறள் ஒப்பாய்வுரை எழுதி வெளியிட்டுள்ளார்.

1982 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும், பிளாட் அமைப்பின் தலைவர் உமாமகேசுவரன் அவர்களும் சென்னை பாண்டி பஜாரில் உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராத நிலையில் சந்தித்த போது, துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டார்கள். இதன் விளைவாகக் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். பிறகு மூத்த வழக்கறிஞர் என்.டி. வானமாமலை அவர்களின் உதவியோடு அனைவரையும் பிணையில் எடுத்தேன்.

ஐயா அவர்கள், அவர்கள் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துவருமாறு என்னிடம் கூறினார். அவ்வாறே இருவரையும் அவரிடம் அழைத்துச் சென்றபோது, “ஏன் பிரிந்திருக்கிறீர்கள்? ஒன்றுபட்டு இயங்கவேண்டும்” எனப் பலவாறு அறிவுரைக் கூறினார்.

போகப் போக உண்மை நிலைமையை அறிந்தார்.1988 ஆம் ஆண்டில் “ஓ பிரபாகரனே! கதிர்க்கையனே! நீ எங்கே இருக்கிறாய்?” என்ற தலைப்பில் ஒரு கவிதையையும், 1989 ஆம் ஆண்டில் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து என்ற கவிதையையும் அவர் படைத்தார்.

மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன வேந்தன்!
இறந்த இனப்புகழை ஏற்றிவைத்த வீரன்!
திறந்த மார்பொடு பகையினைத் தீர்த்த
சிறந்த இராவணற்கும் சிறப்பளித்த தமிழன்! – அவன்
பிறந்தொளிர்ந்த நாள்நினைந்து பேரிகையே முழங்கு!
பெற்றான்காண் பெரும்புகழும்!
பிளிறுகவே வேழம்!

பிரபாகரன் என்னும் சொல் வடசொல் ஆதலால் கதிர்க்கையன் என ஐயா தமிழாக்கம் செய்து இப்பாடலில் பதித்தார். இந்த வாழ்த்துப் பாடலில் பாவலரேறு அவர்கள் “பிளிறுகவே வேழம்!” எனத் தொலைநோக்கோடு கூறினார். ஆம்! அவர் சொல் உறுதியாக நிறைவேறும்.விரைவில் புலி உறுமும். அந்த உறுமலில் உலகத் தமிழர் ஒன்றுபட்டு நிற்பர். தமிழீழம் விரைவில் மலரும்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response