இன்று தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள். இதையொட்டி,தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் எழுதியுள்ள கட்டுரை.
“அவர் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச் சுற்றிவந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த மெகசுதனிசும் பேசியிருக்க முடியாது. அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது. அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர். உருசிய இலெனினைவிடப் பொதுமக்களை நேருக்கு நேராகக் கண்டுபேசியவர். குருசேத்திரப் பாரதப் போரைவிட ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர் மிகப் பெரியது. கடுமையானது. வேறு எவரும் தொடுக்க அஞ்சியது. நினைத்துத் தொடை நடுங்கியது’’
என்று 1971 இல் பெரியாரைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதினார்.
“பெரியார் ஒரு கட்சியின் தலைவர் அல்லர். ஓர் இனத்தின் தலைவர். ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்றின் நாயகர். அவர் தோன்றியிருக்கவில்லையானால், ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது. ஒரு நாட்டின் மேல் போர்த்துக் கிடந்த இருள் விலகியிருக்காது. தமிழனின் தலையெழுத்தே மாற்றப் பெற்றிருக்காது. தன்மானமற்ற நம் இனம் ஆரியச் சேற்றில் மேலும் மேலும் அழுந்திக் கதிகலங்கிப் போயிருக்கும்’’
என்று தன் அழுத்தமான கருத்தைப் பதிவு செய்ததோடு, பல்கலைக்கழகங்களே பெரியாருக்கு முனைவர் பட்டம் கொடுத்துப் பாராட்டுங்கள் என்று அதே காலத்தில்(1971) பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதியிருப்பார்.
பெரியார், தமிழ் ஆராய்ச்சி என்று எழுதிய கட்டுரைக்காகவும், தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று எழுதியதற்காகவும் 1967 ஆம் ஆண்டில் மிகக் கடுமையாகப் பாவலரேறு பெரியாரைச் சாடி தென்மொழியில்,
“அவர் ஓர் அரசியல்காரர் அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக இருக்கலாம். ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ, வரலாற்றுப் பேராசிரியராகவோ, மக்களியல் பேராசிரியராகவோ ஆகிவிட முடியாது. அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும். எனவே அவை அவருக்குத் தொடர்பில்லாத கருத்துகளே என்று விடுக்கவும்’’
என்றும்,
“இவர் அரசியலைப் பொறுத்தவரை ஒரு இலெனினாக இருக்கலாம், குமுகவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக இருக்கலாம். பொருளியலைப் பொறுத்தவரையில் ஒரு மார்க்சாக இருக்கலாம். சீர்திருத்தத் துறையைப் பொறுத்தவரையில் ஒரு பெரியாராகவும் இருக்கலாம். ஆனால் மொழித் துறையைப் பொறுத்தவரையில் இவர் வெறும் இராமசாமிதான்’’
என்று மிகக் கடுமையாக எழுதிய பாவலரேறு பெருஞ்சித்திரனார்தாம், மேலே குறிப்பிடப்பட்ட வகையில் 1971 இல் பெரியாரைப் பாராட்டி எழுதியிருந்தார்.
ஏன் அதற்கு முன்பும் பின்பும் பலவகையில் பெரியாரைப் பாராட்டிப் பாடல்களும், கட்டுரைகளும் எழுதியிருந்தார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“திருவள்ளுவருக்குப் பின் தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரையும் தம்மால் முழு அறிஞராக – முழுத் தலைவராக ஏற்றுகொள்ள முடியவில்லை’’ என்று 1989 இல் சிந்தனையாளன் மலரில் எழுதியிருந்தார் பாவலரேறு.
– இவற்றையெல்லாம் இப்போது எழுதிக்காட்டுவதற்குச் சில காரணங்கள் உண்டு.
பெரியார் இப்போது எந்த அளவு அறியப்பட்டிருக்கிறார் என்பதில் உள்ள சில வேறுபட்ட கருத்துகளுக்குரிய செய்திகளை விளங்கிக் கொள்வதற்குத்தான் அவை தேவைப்படுகின்றன.
பெரியாரை இப்போது சிலர் மறுக்கின்றனர். மறுக்கின்றனர் என்பதைவிட எதிர்க்கின்றனர், இழிவுபடுத்துகின்றனர் என்பதைக்கூடக் காணலாம்.
ஏன் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்?
பெரியார் பிறப்பால் தமிழரல்லர், அவர் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றும், அவர் தமிழர் எனத் தமிழர்களை அடையாளப்படுத்தாமல் திராவிடர் என அடையாளப்படுத்தித் தமிழ்த் தேச எழுச்சிக்குத் தடையாக இருந்தார் என்றும் அவரைக் குற்றப்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு விடுதலை அடையவேண்டும் என்பதான கருத்துத் தமிழக வரலாற்றில் 1938லேயே தொடங்கிவிட்டதாயினும், அக்கருத்து அதன் தொடக்கத்திலேயே விடுதலை அரசியலைத் தெளிவானதாய்ப் பெற்றிருக்கவில்லை. அக்கருத்தை முன்வைத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் முன்வைத்தனர்.
இன்றைய அளவிலும் தமிழ்த் தேச விடுதலையை முன்மொழியும் இயக்கங்கள் பலவும் எவ்வாறு பல்வேறு அளவீடுகளில் அவ்விடுதலைக் கருத்தை விளங்கிக் கொள்கிறார்களோ, அப்படித்தான் அந்தக் காலத்திலும் விளங்கியிருந்தார்கள்.
1938 இல் திருச்சி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் முதன்முதலில் தமிழ்நாடு தமிழருக்கே என இருந்தாலும், நிறைவேற்றப்பட்டதான அத் தீர்மானமே போதுமான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறியமுடியும்.
4.8.1940-இல் திருவாரூரில் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்கிற வகையில் விடுதலையைப் பேசியது.
1940 இல் சென்னை (மாகாணம்) தலை மாநிலம்(பிரசிடென்சி) என்கிற அளவிலேயே இருந்ததும், இன்றைய ஆந்திராவின் நெல்லூர் வரையிலும், சில கருநாடாகப் பகுதிகளும், கேரளத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டதாகவே சென்னைத் தலைமாநிலம் இருந்தது. எனவே, அவற்றை இணைத்த பகுதிகளை அடையாளப்படுத்தியே திராவிட நாடு என்று பேச வேண்டியிருந்தது.
மேலும், அன்றைய பிரிட்டீசு ஆட்சியரே இந்தியாவை ஆண்டதால், சென்னை தலைமாநிலத்தை நேரடி அரசின்கீழ்க் கொண்டுவரவேண்டும் என்ற அளவிலேயே விடுதலை பற்றிய விளங்குதல்கள் இருந்தன.
(இந்த இடத்தில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளின் மொழித் தேச உரிமை அரசியல் எவை எனவும், தமிழ்த் தேச இயக்கங்கள் தமிழ்நாடு விடுதலை குறித்து வைத்திருந்த தொடக்கக் கால அரசியல் மதிப்பீடுகள் எப்படியானவை என்பதையும், அவற்றை அவை செழுமைப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்த முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பெரியாரின் தமிழ்நாடு விடுதலை அரசியலின் படிநிலை வளர்ச்சி நிலை விளங்கும்.) அதன்பிறகு அக் கருத்து படிப்படியே வளர்ந்ததைக் காணமுடியும்.
1947 இல், இந்தியா விடுதலை பெற்றதை விடுதலை என்று கொண்டாட இயலாது, அது ஓர் அதிகாரக் கைமாற்று, எனவே அது நமக்கு இழவு நாள் என்று அறிவித்தவர் பெரியார் ஒருவரே.
`இந்துசுத்தான் `சுயராட்சியம்’ என்று கொண்டாடப் போகும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டீசாருக்கு ஏஜெண்டாக, வடநாட்டுப் பிர்லா, பஜாஜ் குழுவினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுயாட்சி என்று எந்த அரசியல் நிபுணராலும் கூறமுடியுமா?’’ – என்று மிக விரிவாகக் கேள்வியெழுப்பி மறுத்தார்.
அந்தவகையில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எந்தத் தலைவரும் சரி, தமிழ் அறிஞர்கள், கருத்துடையவர்கள் எவரும் அவ்வாறு அக்காலத்தில் அறிக்கை விடவில்லை, கருத்தை வெளிப்படுத்திடவில்லை என்பதை அறிய வேண்டும்.
1956- மொழிவழி மாநிலப் பகுப்புக்குப் பின்னர் `திராவிடர் நாடு’ என்று அடையாளப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுத் `தமிழ்நாடு விடுதலை’ என்றே முழங்கியும், வலியுறுத்தியும் வந்தார் பெரியார். பார்ப்பனர் அல்லாதாரை அடையாளப் படுத்திட வேண்டிக் கால்டுவெல், அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்டு அக்கால அறிஞர்கள், ஆய்வாளர்கள் பலர் பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் பொதுப்பட திராவிடர் என அழைத்திட்ட வகையிலேயே பெரியாரும் அடையாளப்படுத்தினார்.
`இனியாவது, ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் ’தமிழ்நாடு தமிழருக்கே’ எனப் பச்சைக் குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள்தோறும் ’தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியர் புகுந்து கொண்டதோடு அல்லாது, அவர் நம் எசமான் என்றால் – நமக்கு இதைவிட மானமற்றத் தன்மை இழிதன்மை வேறு எனச் சிந்தியுங்கள்.
புறப்படுங்கள், தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்னமாக்குங்கள் – என்று 1957 (திசம்பர் 3ஆம் நாள் விடுதலையில்) எழுதியுள்ளார்.
தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் படத்தை எரிக்கச் சொல்லியதற்கும், முன்னெடுத்து நிகழ்ச்சிகள் நடத்தியதற்கும் தடுப்புக்காவல் சட்டத்தில் 1960 இல் சிறையிலிடப்பட்டார்.
`சுதந்திரத் தமிழ்நாடு ஏன்’ என்ற சிறுநூலை வெளியிட்டார்.
அதன்பிறகும் ஆங்காங்கே நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தித் தொடர்ந்து பேசி வந்தவர் 1973 இல் தாம் மறையும்வரை தமிழ்நாடு விடுதலைக்காகப் பெரும் போராட்டமாக முன்னெடுத்து நடத்த இயலாவிட்டாலும் தொடர்ந்து பேசி வந்தார்.
தன் உடல்நிலை ஒத்துழைக்காத போதும் தியாகராயநகரில் நடைபெற்ற இறுதிச் சொற்பொழிவில் தன் மூச்சுப் போகும் நிலையிலும் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தினார்.
வடநாட்டான் கடைமறியல், இந்தியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் பட எரிப்பு என்று போராட அழைத்ததோடு, போராடிப் பெற வேண்டிய நிலையில் போராடாமல் சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறவர்கள் பித்தலாட்டக்காரர்கள் – என்று சாடினார்.
1940-இலும், 1942-இலும், சென்னைத் தலைமாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று அமைச்சரவையைக் கூட்டும்படி ஆளுநர் அழைத்தபோதும், பெரியார் அதை ஏற்கவில்லை என்பதை இந்த இடத்தில் இணைத்து உணரவேண்டும்.
பலரும் அறிந்து வைத்திருப்பதுபோல் அவர் கடவுள் மறுப்புக் கருத்துக்காகவே பெரும்பொழுது உழைத்தவர் அல்லர். அவரின் முனைப்பு பல்துறை சார்ந்தது. இட ஒதுக்கீடு தொடங்கி சாதி ஒழிப்பு நோக்கிய வகுப்புவாரித்துவம், இந்தி எதிர்ப்பு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, வடநாட்டான் எதிர்ப்பு, இன விடுதலை, தமிழ்நாட்டு விடுதலை என அவர் எடுத்து செயலாற்றிய பரப்பு விரிந்தது.
இவற்றில் எவருக்காகவும், எந்த அடக்குமுறைகளுக்காகவும் தன் கருத்துகளை கைநெகிழ்த்தவரோ, மாற்றிக் கொண்டவரோ அல்லர். தமிழ்மொழிபற்றிய அவரின் சில கருத்துகூட பிழையான கருத்துகளே அன்றி, யாரையும் நிறைவுபடுத்துவதற்காக அவர் பொய்யாகப் பேசியவை அன்று. யாருக்கும் அஞ்சிக்கொண்டு போராடாமல் இருந்தவரும் அல்லர்.
ஆனால், அவர் காலத்தில், தமிழ்நாடு விடுதலை குறித்துப் பேசிய பலரும் இடைமுறிந்துப் போனதும் பிறருக்காக மாற்றிப் பேசியதும், அடக்குமுறைக்கு அஞ்சி அடங்கிப் போனதும்போல் பெரியார் இருந்திடவில்லை என்பதை உணரவேண்டும்.
1963 – பிரிவினை தடைச் சட்டத்திற்காகத் திராவிட நாடு கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன நாங்கள்தாம் கைவிட்டுவிட்டோம் – எனத் திமுக சொன்னதுபோல், தான் பேசிய கருத்துக்கு நேர்மாறாய்ப் பேராயக் கட்சியின் இந்திய அரசு அழைத்துத் தந்த பாராட்டை அண்ணல் தங்கோ ஏற்றுக் கொண்டது போல், 1938 இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தவிர மறைமலையடிகள் வேறு எங்கும், வேறு எப்போதும் தமிழ்நாடு விடுதலை குறித்துப் பேசாததுபோல், தம் தமிழ்த்தேசியக் கருத்துக்கு நேர்மாறாய் இந்திய தேசியத்தில் ஈ.வெ.கி. சம்பத் கரைந்ததுபோல், பிற்காலங்களில் இராசாசியுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு விடுதலைக்கு எதிராகவும் தமிழீழத்தை எதிர்த்தும், ம.பொ.சி. பேசியதுபோல், இடையிடையே மேடையில் பேசியதுதவிர வேறு போராட்டம் ஏதும் செய்யாமல் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அடங்கிப் போனது போலெல்லாம் பெரியார் எப்போதும் இருந்திடவில்லை.
சில நேரங்களில் அவர் பிழைபட சில செய்திகளைப் பேசியதைச் சுட்டிக் காட்டுகிற இன்றைக்கு இருக்கிற சிலரின் கருத்துகள் பிழைபாடு இல்லாமலும் முரண்பாடு இல்லாமலும் வளர்ந்ததாகப் பார்க்க முடியாதுபோலவே, பெரியாரின் பேச்சிலும் சில பிழைகள் உண்டு. ஆனால் அவ்வகையில் சரியான சுட்டிக்காட்டல்களைப் பெரியார் ஏற்காமல் விட்டதுமில்லை என்பதையும் அறியவேண்டும்.
பெரியார் செய்யும் பெரும்பிழை என்று தமிழ்குறித்துப் பெரியாரின் கருத்தைப் பிழையெனப் பாவலரேறு 1967-இல் திறனாய்ந்து எழுதிய கருத்துகளைப் பெரியார் படித்து ஏற்றுச் சிந்தித்தது மட்டுமன்றி, பாவலரேறு எழுதிய கருத்தை மறுத்துப் பிறர் எழுதியதை விடுதலையில் வெளியிடாமல் இருந்ததையும் தென்மொழியிலேயே பாவலரேறு பதிவு செய்துள்ளார்.
ஆக, பெரியாருடைய கருத்துகள் மட்டுமன்று, எவருடைய கருத்துகளானாலும் திறனாய்வுக்குரியவையே.
ஆனால் பெரியார் பிறப்பால் கன்னடர், இன்ன பிறப்பினர் அதனால் அவரின் கருத்து இப்படியாகத்தான் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிடுகிற ஆரியப் பார்ப்பனிய வருணாச்சிரமக் கண்ணோட்டத்தை நாம் ஏற்றிட முடியாது.
ஒருவர் என்ன கருத்துடையவர், யாருக்காக உழைப்பவர், என்ன வகையான நடைமுறைகளைக் கொண்டிருப்பவர் என்பதே ஆய்வுக்குரியவையே அன்றி, என்ன பிறப்புடையவர் என்ற கண்ணோட்டம் தவறானது மட்டுமன்றி இழிவானதுமாகும்.
இந்தவகையில் பெரியாரின் சில பிழையான கண்ணோட்டங்களை, செயல்பாடுகளை நாமும் திறனாய்ந்து பேசியிருக்கிறோம். அவ்வகையில் அப் பிழைகளை ஓரமாக வைத்துவிட்டு, அவர் மேற்போட்டுக்கொண்டு உழைத்த பெரும் கொள்கைச் செயற்பாடுகளை மதிப்பிடுவதும், அவற்றை ஏற்றுக் கொண்டு நாமும் செயல்பட வேண்டும் என்பதுமே இன்றைய காலத்தின் தேவை என்பதை உணர்ந்தாக வேண்டும்.
வல்லாட்சி அதிகார வகுப்புகளை எதிர்த்து மக்களின் விடுதலைக்கு மார்க்சியம் எந்த அளவு அடிப்படைத் தேவையுடையதோ, தமிழிய அறவுணர்வுக்குத் திருவள்ளுவம் எந்த அளவு தேவையானதோ, அந்த அளவு இந்தியப் பார்ப்பனிய எதிர்ப்புக்கும், சாதி ஒழிப்புக்கும் பெரியாரியமும், அம்பேத்காரியமும் கட்டாயத் தேவையானவையே. அவர்களின் கருத்துகளையும், செயல்பாடுகளையும் அறியாமல் முன்னெடுக்காமல் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு இவற்றை நாம் கடந்திட முடியாது.
தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்குத் தடையாக இருக்கும் இந்தியத்தை எதிர்க்க வேண்டுமானால், பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டுமானால், பெரியாரின் கருத்துகளும் போராட்டங்களும் தமிழர்களுக்குரிய போர்க்கருவிகள் என்று உணர்ந்துகொள்ளவும் கையிலெடுக்கப்படவும் வேண்டும்.
இந்தியப் பேராதிக்கத்தை, வல்லரசியச் சூறையாடல்களை, ஆரியப் பார்ப்பனியத்தை, சாதிய கொடுநெறியையெல்லாம் வீழ்த்திப் புதிய தமிழகம் காணவேண்டும் எனும் நோக்கமுடையோர் அனைவரையும் சிந்தாமல் சிதறாமல் கூட்டிட வேண்டுமானால் தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் ஓரணி திரண்டாக வேண்டிய நெருக்கடியான காலத்தில் உள்ளோம் என்பதை விளங்கியாக வேண்டும்.
இந்த அறிதலின்றி தங்களுக்குள் குத்துதல், குடைதல் செய்து ஒற்றுமையைக் குலைப்போரைத் தமிழ்த் தேச விடுதலை விடுதலை எழுச்சியில் அக்கறை அற்றோர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
பெரியாரை மட்டுமன்றி அனைவரையும் அனைத்து நிகழ்வுகளையும் இயங்கியல் வழிப்பட்ட குமுக அறிவியல் ஆய்வுடன் அறிய வேண்டுவதே சரியான பார்வை..
தமிழ்த் தேசம் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்..
– பொழிலன்