விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்

தில்லியில் உழவர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல் தேசிய அவமானம் என்று ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்….

கடந்த 62 நாட்களாக இலட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி கொட்டும் பனியில் அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்க பட்டபோதும் விவசாயிகள் சற்றும் மனம் தளராமல் போராடியதைக் கண்டு உச்சநீதிமன்றமே விவசாயிகள் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்து மத்திய அரசை தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தியது.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பே விவசாயிகள் அறிவித்தார்கள்.

சொல்லியபடி இன்று அமைதியாக நடந்து கொண்டிருந்த டிராக்டர் பேரணியில் மத்திய அரசு காவல்துறையை கொண்டு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக தடியடி நடத்தி விவசாயிகளை தாக்கியது இந்த தேசத்தின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

மக்கள் புரட்சிக்கு முன்பு எந்த ஆட்சியாளர்களும் வென்றதாகச் சரித்திரம் இல்லை.

இந்திய குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response