2020 இல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநில விவசாயிகள் குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தினர்.
அதன்விளைவாக அச்சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மோடி அறிவித்துள்ளார்.
இதையொட்டி ஏர்முனை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
திரு.நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு பெரும் தீமை விளைவிக்கும் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பாராளுமன்றத்தில் எந்தவித விவாதங்களும் நடத்தாமல் எதேச்சாதிகாரமாக
தன்னிச்சையாக அவசரச் சட்டமாக அறிவித்தது.
நாடு முழுவதும் விவசாயிகள் அந்தச்சட்டங்களைத் திரும்பப் பெறப் கோரி கடுமையாகப் போராட்டங்கள் நடத்தினார்கள்.ஆனாலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப் விவசாயிகள் தலைமையில் வீரசெறிந்த போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.அவர்களுடன் பிற மாநில விவசாயிகளும் இணைந்து போராட்டக் களத்தை வலுவாக்கினர்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் போராட்டம் பல்வேறு நெருக்கடிகள்,அரசு அடக்குமுறைகள்,துரோகங்களை தாண்டி கட்டுக்கோப்பாக தொடர்ந்து வீரியம் குறையாமல் நடந்துவந்ததை உலகமே வியந்து பார்த்தது.
இந்தப்போராட்டக் களத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய விவசாயிகள் மீது கடுமையான ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது.
உண்மையாகவும் நேர்மையாகவும் போராடிய விவசாயிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் ஒன்றிய அரசும் பாஜகவும் அதன் சார்பு அமைப்புகளும் சுமத்தி களங்கம் கற்பிக்க தொடர்ந்து செயல்பட்டனர்.
எதைக்கண்டும் அஞ்சாமல் கொண்ட கொள்கைக்காக ஏற்றுகொண்ட போராட்டத்தை ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற உறுதியோடு அகிம்சை வழியில் போராடிய விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த திரு.மோடி அவர்கள் மக்கள் சக்திக்கு முன்பு சர்வாதிகாரமும் எதேச்சாதிகாரமும் ஒருபோதும் வென்றதில்லை என்பதை உணர்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற இருப்பதாக அறிவித்திருப்பது உழவர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்*.
அதே வேளையில் விவசாயிகளை தேசவிரோதிகள் போல சித்தரித்து கடுமையான ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் இறப்புக்கு ஒன்றிய அரசே காரணம் என்று குற்றம் சாட்டுகிறோம்.
தங்கள் இன்னுயிரை இழந்த உழவர்கள் குடும்பத்தினருக்கு ஒன்றிய அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்*.
மக்கள் சக்திக்கு முன்பு எந்த சர்வாதிகாரமும் வென்றதில்லை என்பதை நிரூபித்த உழவர்கள் போராட்டம் இனி உலக அரங்கில் நியாயமான போராட்டம் நடத்தும் அத்துணை பேருக்கும் உத்வேகம் கொடுத்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த உழவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
இவண்
என்எஸ்பி.வெற்றி
செயல் தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
தலைவர்
ஏர்முனை இளைஞர் அணி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.