வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாகக் கரையைக் கடந்தது.
இன்று அதிகாலை 1.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது.
இதன்காரணமாக ஆந்திரா, மற்றும் புதுவையில் அதிக மழை பெய்துள்ளது..தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து ரெட் அலர்ட் எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,
‘வட தமிழகத்தில் மேல் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
இதுவரை பெய்ததில் அதிக அளவாக புதுச்சேரியில் 19 செ.மீ மழையும் கடலூரில் 14 செமீ மழையும் பதிவாகி உள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல், வடதமிழக கடற்கரை, ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு இன்று மதியம் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்,’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.