கண்ணீருடன் கரும்புவிவசாயிகள் – சரிசெய்ய ஏர்முனை வேண்டுகோள்

உழவர் திருநாளில் உழவனை கண்ணீர் சிந்த வைக்கிறது தமிழக அரசு என்று ஏர்முனை இளைஞர் அணித்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் கடந்த சில ஆண்டுகளாக செங்கரும்பும் கொடுக்கப்பட்டு வந்தது.

அரசாங்கமே கொள்முதல் செய்வதால் ஓரளவுக்கு நியாயமான விலையும் கிடைத்ததால் கரும்பு விவசாயிகளும் நம்பிக்கையோடு பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் திட்டமிட்டுப் பயிர் செய்து வந்தனர்.

செங்கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியாக இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு கொடுக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான ஏக்கரில் பெரும் முதலீடு செய்து கடும் உழைப்பால் பெருத்த நம்பிக்கையோடு விளைவிக்கப்பட்ட செங்கரும்பை அரசாங்கம் பொதுமக்களுக்காக கொள்முதல் செய்யாவிட்டால் விவசாயிகள் பெருத்த நட்டத்திற்கு உள்ளாகி பொருளாதார ரீதியாக மிகப் பெரும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படும்.

தமிழர் திருநாளாம் பொங்கலில் உழவர் பெருங்குடி மக்கள் வெந்து வேதனைப்படுவதை தமிழக அரசு விரும்புகிறதா?

இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்குக் கரும்பைக் கொள்முதல் செய்வதற்காகத் தோட்டம் தோட்டமாக அலைகின்றனர்.

தமிழக அரசு முன்பே பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தால் விவசாயிகள் இவ்வளவு பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்திருக்க மாட்டார்கள்.

தமிழக அரசை நம்பிப் பயிர் செய்த செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசாங்கமே இந்த முறை கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழகமெங்கும் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் செய்து வரும் நிலையில் விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து தமிழக அரசு உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்.

உழவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளத் தவறினால் அனைத்து உழவர் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்

என்.எஸ்.பி.வெற்றி 
செயல் தலைவர், 
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.
தலைவர்,
ஏர்முனை இளைஞர் அணி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response