காட்டுமன்னார்கோவில் வீரனந்தபுரம் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்றுவது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு ஆதரவாக வீடுகளைக் காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என மக்களுக்குக் குரல் கொடுத்த காங்கிரசுக் பிரமுகரும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான இளங்கீரனுக்கும், காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இளங்கீரனை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரவுடியைப் பிடித்து இழுப்பது போல் இழுத்து, தாக்கி வண்டியில் ஏற்றினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட இளங்கீரன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ஏழை மக்களுக்காகக் குரல் கொடுத்த விவசாய சங்கத் தலைவரை, பொதுமக்கள் மத்தியில் ரவுடியை இழுத்துச் செல்வது போல் இழுத்துச்சென்ற காவல்துறையின் செயல்பாடு அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு இதுதான் நிலைமையா? என்று அப்பகுதியில் உள்ளவர்கள் வேதனைக் குரல் எழுப்புகிறார்கள். கடந்த பொங்கல் தினத்தன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாய சங்கத்தலைவருடன் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிய போது, கடலூர் மாவட்டத்தில் இருந்து இவரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயச் சங்கத் தலைவர் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் ஏர்முனை அமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. கே.வி.இளங்கீரன் அவர்களை காட்டுமன்னார்கோயில் காவல்துறை அதிகாரிகள் ஒரு பிரச்சினை குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல் கடுமையாகத் தாக்கி அவர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருக்கிறார்கள்.
ஜனநாயக நாட்டில் நியாயமான மக்களுக்கான போராட்டங்களை நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.இளங்கீரன் அவர்களைத் தாக்கி கைது செய்த காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், எந்த வித நிபந்தனையும் இன்றி திரு.இளங்கீரன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.