துப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று தில்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு தில்லி காவல்துறையினர் முதலில் அனுமதி மறுத்த நிலையில், நண்பகல் 12 மணிக்குப் பிறகு பேரணியை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டாலும், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தில்லிக்குள் நுழைய முயன்றனர். தில்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், தடுப்புகளை உடைத்து தில்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், தில்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளைத் தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காசிப்பூர் எல்லை வழியாக தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது.

இதனைத்தொடர்ந்து தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் காவல்துறையினர் தடுப்புகளைக் கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசியக் கொடிக் கம்பத்தின் அருகே திரண்டு முழக்கங்களையும் எழுப்பினர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.

செங்கோட்டையைச் சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையைச் சுற்றிலும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.காவல்துறையினர் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்த‌தாகப் போராட்டக்கார‌ர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

எனினும், விவசாயிகளின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, தில்லி காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். விவசாயிகள் தடுப்புகளைத் தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Response