
இரண்டு நாட்கள் இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளார் இந்தியக் குடியரசு துணைத்தலைவர்
சி.பி இராதாகிருஷ்ணன்.அந்தப் பயணத்தில் சிங்கள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்தார்.
அதோடு, தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.ஏப்ரல் 19 அன்று பிற்பகல் கொழும்பிலுள்ள தாச்சமூத்திரா நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அந்தச் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அப்போது, தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், ஒரு மனுவை சி.பி.இராதா கிருஷ்ணனிடம் கொடுத்தார்.
அதில்,சிங்கள அரசு ஏக்ய ராஜ்ய எனும் பெயரில் அரசியல் சட்டத்திருத்ததை மேற்கொள்ளவிருக்கிறது. அது தமிழ்த்தேசத்தின் இறைமையை சுயநிர்ணய உரிமையையும் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி.
எனவே,இந்திய அரசு, சிங்கள அரசு மீது அழுத்தங்களைக் கொடுத்து ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் சிங்கள அரசின் ஒற்றையாட்சி முறைமையை நீக்கவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக புதிய அரசியல் அமைப்பில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
