கொரோனா பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு – மக்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து நேற்று ஹத்ராஸ் சென்றனர்.

நொய்டா அருகே உத்தரபிரதேச எல்லையில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்தபோது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களில் இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசார், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி கால்நடையாகச் செல்லத் தொடங்கினர். அவர்களுடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும் சென்றனர்.

ஆனால் சிறிது தூரம் சென்றதும் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோரை உத்தரபிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட களேபரத்தில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். அவரை காங்கிரசு தொண்டர்கள் தூக்கி விட்டனர்.

பின்னர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை இருவரையும் விடுவித்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரசு நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா காவல்துறையினர் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கவுதம்புத்தா நகர் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….. ,

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, உள்பட 203 காங்கிரசு தொண்டர்கள் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 188(அரசு ஊழியரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல்), பிரிவு 269(மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் வகையில் நோயைப் (கொரோனா) பரப்புதல்), பிரிவு 270 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையினருக்கும், காங்கிரசு தொண்டர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் சில பெண் காவல்துறையினர் காயமடைந்தனர். பெண் காவல் துணை ஆய்வாளர் ஒருவரின் சீருடை கிழிக்கப்பட்டது

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரை கீழே தள்ளிவிட்டதும் இல்லாமல் குழியும் பறித்தது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு,அதற்கேற்ப ராகுல்காந்திஅயைக் கீழே தள்ளிவிட்டதும் இல்லாமல் கொரோனா பரப்பினார் என்று வழக்கும் போட்டுள்ளது உத்தரபிரதேச பாஜக அரசு என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்கள்.

அடுத்த பிரதமர் என்று சொல்லப்படுபவர் மீதே இப்படி ஒரு பொய்வழக்கா? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response