தொடர்ந்து 3 தோல்விகள் – சென்னை அணி இரசிகர்கள் சோகம்

8 அணிகள் பங்கேற்றுள்ள 13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 14 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின.

சென்னை அணியில் மூன்று மாற்றங்கள். முரளிவிஜய், ருதுராஜ் கெய்க்வாட், ஹேசில்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக நுழைந்தனர். தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ (0) ஆட்டம் இழந்தார். இன்ஸ்விங்காக சீறிய அந்த பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடினாலும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 29 ரன்களில் (21 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் (28 ரன், 29 பந்து) பியுஷ் சாவ்லாவின் சுழலில் சில அடி இறங்கி வந்து பந்தைத் தூக்கினார். அதை எல்லைக்கோடு அருகே பிளிஸ்சிஸ் பிரமாதமாக கேட்ச் செய்தார். அடுத்த பந்தில் வில்லியம்சன் (9 ரன்) பாதி தூரம் ஓடிவிட்டு திரும்பிய போது ரன்-அவுட் ஆக, ஐதராபாத் அணி நெருக்கடிக்குள்ளானது. அப்போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 69 ரன்களுடன் (11 ஓவர்) தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்த சூழலில் இளம் வீரர்களான பிரியம் கார்க்கும், அபிஷேக் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து தங்கள் அணியைச் சிக்கலில் இருந்து மீட்டெடுத்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் சென்னை பவுலர்களை மிரள வைத்தனர். சாம் கர்ரனின் ஒரே ஓவரில் பிரியம் கார்க் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இதனால் ஐதராபாத்தின் ரன்ரேட் மளமளவென உயர்ந்து 8-ஐ கடந்தது. கடைசிக் கட்டத்தில் சென்னை அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவுக்கு 26 ரன்னில் ஜடேஜாவும், 30 ரன்னில் ஷர்துல் தாகூரும் எளிதான கேட்ச்சை நழுவ விட்டனர்.

அணியின் ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்த போது அபிஷேக் ஷர்மா 31 ரன்களில் (24 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) தோனியிடம் கேட்ச் ஆனார். இன்னொரு பக்கம் அணியை தூக்கி நிறுத்திய 19 வயதான பிரியம் கார்க் ஐ.பி.எல்.-ல் தனது முதலாவது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. பிரியம் கார்க் 51 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அப்துல் சமத் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு வழக்கம் போல் தொடக்கம் தள்ளாடியது. ஷேன் வாட்சன் (1 ரன்) புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பிளிஸ்சிஸ் (22 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார். இதற்கிடையே 2 ஆவது விக்கெட்டுக்கு வந்த அம்பத்தி ராயுடு 8 ரன்னிலும், கேதர் ஜாதவ் 3 ரன்னிலும் நடையைக் கட்ட சென்னை அணி பரிதவித்தது. முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன் மட்டுமே எடுத்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் 10 ஓவர்களில் ஒரு அணியின் மந்தமான ஸ்கோர் இது தான்.

5 ஆவது விக்கெட்டுக்கு தோனியும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை மீட்கப் போராடினர். ஆனால் ரஷித்கானின் சுழலில் திணறியதால் ரன்ரேட் நிமிரவில்லை. 15 ஆவது ஓவருக்கு பிறகு தோனியும், ஜடேஜாவும் கொஞ்சம் தீவிரம் காட்டினர். குறிப்பாக ஜடேஜா, புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி, நடராஜனின் பந்து வீச்சில் சிக்சர் என்று தனது முதலாவது ஐ.பி.எல். அரைசதத்தை எட்டினார். ஜடேஜா 50 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இதன் பிறகு 19 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும், சிக்சரும் தோனி அடித்தாலும் நெருக்கடி தணியவில்லை.

வெற்றிக்கு, கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அப்துல் சமத் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 7 ரன் வித்தியாசத்தில் 2 ஆவது வெற்றியைப் பெற்றது. தோனி 47 ரன்களுடனும் (36 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சாம் கர்ரன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 4 ஆவது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3 ஆவது தோல்வி இதுவாகும்.

சென்னை அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்பது 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.
இதனால் சென்னை அணி இரசிகர்கள் மிகவும் சோகத்துடன் சோர்ந்து போயுள்ளனர்.

Leave a Response