தோனி மஞ்சள் தமிழர் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நவம்பர் 20 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது:

முதலமைச்சராக அல்ல, தோனியின் ரசிகனாக பாரட்டு விழாவுக்கு வந்துள்ளேன். நான் மட்டுமல்ல எனது பேரப்பிள்ளைகளும்,முத்தமிழறிஞர் கலைஞரும் தோனியின் ரசிகர்கள்தான். சென்னை என்றாலே சூப்பர்தான். மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் வெள்ள பாதிப்பு, நிவாரணப்பணிகள் குறித்தே நான் சிந்தித்து கொண்டிருக்கிறேன்.

நெருக்கடியான காலத்தில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்றே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். சென்னை மேயராக இருந்த போது காட்சிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது தோனி.

தோனியின் சொந்த மாநிலம் ராஞ்சியாக இருந்தாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். தமிழர்கள் பச்சைத்தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர்.

எந்த நெருக்கடியிலும் தலைவர் கலைஞரும், தோனியும் கூலாக இருப்பார்கள். இலக்கும், உழைப்பும் ஒன்று சேர்ந்தால் அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. இது விளையாட்டுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும்.

ஆட்சிக்கு வந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும்போது என்னை, “தினமும் சிக்ஸர் அடிக்கிறார்” எனப் பாராட்டினார்கள். அப்போதெல்லாம் தோனியை நினைத்துக்கொண்டேன்.

அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை என்னால் மறக்க முடியவில்லை. தோனி தலைசிறந்த ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என சொல்வதை விட சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஒரு அணியை உருவாக்கியவர்தான் தலைசிறந்த ஆளுமையாக போற்றப்படுவார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் என்னுடைய மனது மழை நிவாரண பணிகளையே சிந்திக்கிறது. கோட்டையில் இருந்தாலும் குடிசையை நினைக்க வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார். அதே மனநிலையில்தான் இந்த மேடையில் நான் இருக்கிறேன்.

ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் தோனி. ஒரு அணியை உருவாக்கியவர்தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார். ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி இருப்பதால்தான் அனைவராலும் தோனி பாரட்டப்படுகிறார். எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைய உழைப்பு தான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response