சென்னையில் சமஸ்கிருத இறைவணக்கமா? – மருத்துவர் இராமதாசு கண்டனம்

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்….

சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாகக் கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.

2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐ.ஐ.டி மாற்றக்கூடாது.

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாகப் பாடப்பட வேண்டும். ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் இது குறித்து தமிழக அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு மருத்துவர் இராமதாசு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response