தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மத்திய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை ஐஐடி உடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை சார்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழா பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது.

சாகர்மாலா திட்டத்தின்கீழ், சென்னை ஐஐடி தேசிய தொழில் நுட்ப மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் துவக்கத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதே வழக்கம். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி என துவங்கும் பாடலை மாணவர்கள் பாடினர்.

மத்திய அமைச்சர் கலந்து கொண்ட விழாவில், தமிழை அவமதிக்கும் விதமாக சமஸ்கிருத மொழி பாடல் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் ஒரு முறை அவமதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழைப் புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்

என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response