பாஷை முக்கியமில்லை – ஐஐடி இயக்குநர் திமிர்ப்பேச்சு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து சார்பில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஐஐடி நிறுவனம் தமிழக சாலைபோக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்துக்கு உதவுவது என்ற அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருதப்பாடல் பாடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வழக்கம் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துக்கொண்ட கூட்டத்தில் அரசு விழா என்ற அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணித்து வருவதையே இது காட்டுகிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது குறித்து ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பதிலளித்தார். அவரது பேட்டி வருமாறு:

தமிழ்த்தாய் வாழ்த்தா , சமஸ்கிருதமா என்பது முக்கியமல்ல். இங்குள்ள பிரச்சனை, ஐஐடி தமிழ்நாட்டுக்கு என்ன செய்கிறது. நாம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்ன செய்கிறோம், இங்குள்ள கல்லூரிகளுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேளுங்கள். அதை விடுத்து எந்த பாஷையில் பாடுகிறீர்களென்று கேட்காதீர்கள்.

இது மதம் சார்ந்த பாடலாக உள்ளதாக கூறுகிறார்களே?

இது மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட பாடல். இதில் மதம் பிரச்சினை இல்லை. மூன்று மாணவர்கள் தேர்வு செய்து பாடினர்.

முக்கிய அரசு நிகழ்ச்சியில் மாணவர்கள் இப்படி தேர்வு செய்ய அதிகாரம் எப்படி கொடுத்தீர்கள்?

நாங்கள் வழக்கமாக டிபார்ட்மெண்டில், இது போன்ற நிகழ்ச்சியில் பாடல் யார் பாடுகிறீர்கள் என்று கேட்போம், இது இன்ஜினியரிங் டிபார்ட்மெண்ட் மூன்று நான்கு பேர் கைதூக்குவார்கள். அவங்களுக்கு தெரிந்த பாடலைத்தான் அவர்கள் பாடுவார்கள். சில நேரம் மராட்டிய பாடல், பெங்காலி பாடல்களைக்கூட பாடியுள்ளார்கள்.

நாங்கள் எதாவது உங்களுக்கு தெரிந்த பாடலை பாடச்சொல்லிவிடுவோம்

ஐஐடிக்கு என்று வழிமுறைகள் எதுவும் இல்லையா?

அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் மியூசிக் குழு எதுவும் வைத்துக்கொள்வதில்லை. தேசிய கீதம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response