தொகுதி மக்கள் மனு கொடுத்தவுடன் டெல்லி சென்று செயலில் இறங்கிய எம்பி – மக்கள் பாராட்டு

சேலம் – கோவை என்எச்-47 சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதாகவும், சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டால் விபத்துகளே இருக்காதெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட இடங்களை திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா பார்வையிட்டார்.

அப்போது இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்பியிடல் மனு கொடுத்தனர்.

உடனே டெல்லி சென்ற சத்யபாமா எம்பி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி.சத்தியபாமா இன்று 07.06.2018 கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவரது மனுவில்,
சேலம் – முதல் கோவை வரையிலான என்எச்-47 ரக சாலையை “பாரத் பரியோஜனா” திட்டத்தின் கீழ் செயல்படுத்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றி. இதில் சேலம் – முதல் செங்கப்பள்ளி வரையிலான சுமார் 103கிமீ தொலைவில் 4 வழி மற்றும் 8 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை தூர இடைவெளி உள்ள சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்படாமல் இருப்பதால் அதிகப்படியான வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அதிகப்படியான சிரமத்திற்கு உள்ளாகி தினமும் வாகன விபத்து அரங்கேறி வருகிறது.

அதிலும் குறிப்பாக 1)பெருந்துறை-கஞ்சிக்கோவில்-கவுந்தபாடி குறுக்குச் சாலையில் 78/4 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்,

அதேப்போல் 2)பெருந்துறை-துடுப்பதி- மக்கினாம்கோம்பை குறுக்குச் சாலையில் 80/8 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம்,

மற்றும் 3)கொளத்துப்பாளையம்-விஜயமங்கலம், குறுக்குச் சாலையில் 89/10 கிலோமீட்டரில் ஒரு சாலை மேம்பாலம்

இதேப்போல் 4)பெருந்துறை-பெத்தம்பாளையம்- கஞ்சிகோவில் குறுக்குச் சாலையில் 79/4 கிலோமீட்டரில் ஒரு மேம்பாலம் ஆகிய சாலை வழி பகுதிகள் அனைத்தும் தினமும் வாகன விபத்து பகுதிகளாகவே விளங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மேம்பாலம் அமைக்கப்படாதது தான் ஆகும்.

இதைத்தவிர மிகவும் முக்கிய பிரச்சனையாக தற்போது இருக்கக்கூடியது விஜயமங்கலம் சுங்கச்சாவடி 88/100 பகுதிதான். ஏனெனில் இரு பக்கங்களிலும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருவதால் அதன் குறுக்கே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக வாகன பாதை எதுவும் அமைக்கபடாமல் அதன் கட்டமைப்பு உள்ளது. அதனால் இரு சக்கரம் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் செல்லுவதை கருத்தில் கொண்டு விஜயமங்கலம் பகுதி சுங்கச்சாவடியின் குறுக்கே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைத்து விரைவில் செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த மத்திய அமைச்சர் அதுகுறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளதாக திருப்பூர் எம்பி.சத்தியபாமா தெரிவித்தார்.

பொதுமக்கள் மனு கொடுத்தவுடனே அதை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்துப் பேசி ஆவண செய்த எம்பியின் செயலுக்கு தொகுதிக்குள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Leave a Response