நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சிக் கொடியில் 6 கரங்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இருப்பதுபோல சின்னம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சின்னத்தை வேறு சில அமைப்புகளும் ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக தெரியவந்தது. இதுபற்றி சமூக வலைதளங்களிலும் பலவித தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாலை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
மும்பையில் இருந்து தமிழர் பாசறையைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எங்களது கட்சிக் கொடியில் உள்ள சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர். என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்குத் தருகிறார்கள்.
விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சிச்சின்னத்தை வைத்திருப்பவர்களை தன்னுடைய செலவில் சென்னைக்கு வரவழைத்து அவர்களைப் பேட்டி கொடுக்கச் சொல்லியிருக்கிறார் கமல்.
திரைப்படங்களுக்குப் பெயர் வைத்துவிட்டு அதை வேறு யாராவது வைத்திருந்தால் பணம் கொடுத்து அதை வாங்கிக்கொள்வார்கள்.
கட்சிச் சின்னம் விசயத்திலும் கமல் அதுபோலவே செய்திருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.