மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு
மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிகழ்கால நேரடி ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெருந்தல – பிக்பாஸ் -நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி. மாலை 6.30 முதல் 10.30 வரை நான்கு மணி நேரமும் விஜய் தசமியை நிகழ்த்திக் காட்டினார்கள்.
சர்க்கரைப் பொங்கல் வைத்தல், சுண்டல் அவித்தல் , பூஜை செய்தல் என்பதில் தொடங்கி , முப்பெருந்தேவியர் கதை என நகர்ந்தது நிகழ்ச்சி. பின்னர் கிராமம் x நகரம் எனப் பிரித்துப் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுகள், பாட்டு, ஆட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள். இரு அணியாகப் பிரிந்தது போக அனிதாவை நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக்கியிருந்தார்கள்.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராக- வெளியில் அவர் செய்யும் தொலைக்காட்சிப் பணியை- அனிதா சம்பத் உள்ளேயும் செய்தார்.
கிராமம் x நகரம் என்ற வேறுபாடுகளையும் நம்பிக்கைகளையும் மனிதர்களின் இயல்புகளையும் பேசி முடித்தபின்பு, இதன் மீது தனக்கும் சில கருத்துகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, கிராமத்தில் இன்னும் சாதியும் பெண்களின்மீதான பழைய கருத்துகளும் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன என்பதைத் தனது அனுபவமாகச் சொன்னார்.
கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் சில மாதங்களுக்குத் தனியாகவும் மற்றவர்களோடு பேசாமல் அமைதியாகவும் இருப்பார்கள்; மெதுவாகத்தான் அடுத்தவர்களோடு இணைந்து வேலைசெய்யத் தொடங்குவார்கள் என்று சொல்லிவிட்டு, ‘ கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும்போது, “ நீங்க என்ன ஆளுங்க” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்பார்கள்; ஆனால் நகரத்தில் அப்படி யாரும் கேட்பதில்லை என்று ஒரு அனுபவத்தைச் சொன்னார். அந்த அனுபவம் ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க’ என்பவர்களுக்கான பதிலாக இருந்தது. அந்தப் பேச்சுக்குப் பெரிய எதிர்வினையோ, முகச்சுளிப்போ மற்றவர்களிடம் இல்லை.
ஆனால் அடுத்தவொரு அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருக்கும் நபர்களில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியின் முகமும் உடலும் அடைந்த மாற்றங்களை அண்மைக்காட்சியாகக் காட்டியது காமிரா. தலையில் பெரிய இடியே விழுந்ததுபோல எண்வகை மெய்ப்பாடுகளையும் காட்டினார் அந்தப் பெரியவர்.
இப்போதும் விதவைப் பெண்களுக்கு மங்கல நிகழ்வுகளில் இடமில்லை; அவரது மகன், மகள் போன்ற ரத்த உறவு தொடர்பான திருமண நிகழ்வாகவே இருந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் தான் முன்வந்து அப்படியெல்லாம் ஒதுங்கி இருக்கக் கூடாது என்று சொல்லிப் பங்கேற்க வைத்தேன் என்று விவரித்தார்.
விவரிக்கும்போது இறப்பு தொடர்பான சொற்களைச் சொல்லிவிட்டார் என்பது சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்டது. விஜயதசமி போன்ற ஒரு மங்கல நிகழ்ச்சியில் மரணம், சாவு, இறப்பு போன்ற சொற்களைச் சொல்லலாமா? என்பதுதான் அவரது பெருங்கவலையாகிவிட்டது.
நேரடியாக முகஞ்சுளித்த அந்தப் பெரியவர் அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் – இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் என அவர் நினைத்த ஒவ்வொருவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பட்டியலில் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ரியோ போன்றோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக அனிதாவிடம் பேசி அவரை மன்னிப்புக் கேட்க வைக்கும் சூழலை உருவாக்கினர். அவரும் மன்னிப்புக்கேட்கவே செய்தார். என்றாலும் அந்தப் பெரியவர் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிடிவாதம் பிக்பாஸ் நிகழ்வின் போட்டிப் பொருள் – கண்டெண்ட் – என்று கூட நினைத்திருக்கலாம். அவரது கவலையின் பின்னணியில் அந்த நம்பிக்கையில் – மங்கல நிகழ்ச்சிகளில் விதவைகளை ஒதுக்கிவைப்பதில் என்ன தவறு? என்ற கேள்வி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையை ஆழமாக வலியுறுத்திய அவருக்குத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் அதிக வாக்குகள் அளித்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம். உள்ளே இருப்பவர்களைப் போலத்தானே வெளியில் இருக்கும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பெருந்தலயில் பங்கேற்கும் அனிதா சம்பத், ஊடகத்தில் இருந்ததால் தனக்குப் பலவற்றையும் குறித்துக் கருத்து இருக்கிறது; அதைப் பேசவந்தால் தடுத்துவிடுகிறார்கள் என நினைக்கிறார். தான்அதிகம் பேசுபவள் என உள்ளே இருப்பவர்கள் நினைக்கிறார்.
வெளியே அந்த நிகழ்ச்சியைக் குறித்து எழுதுபவர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோன்ற பழமொழிகளை அவரோடு பொருத்தி விமரிசனம் எழுதுபவர்களின் எண்ணம் பெண்கள் அதிகம் பேசக்கூடாது என்பதைத் தாண்டி வேறென்னவாக இருக்கும்?.
-அ.இராமசாமி