தஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு

தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் பிறந்த நாளான சதய நாளில், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ் ஒலித்தது.

இதுகுறித்து, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழ்ப் பேரரசன் இராசராசனின் 1035 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 26.10.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சதய விழா தமிழ் மந்திரங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

சதய விழாவன்று மூலவரான பெருவுடையார் கருவறையில் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடன் என்றுகூறி, தமிழ்நாடு அரசுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், கடந்த 22.10.2020 அன்று கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், ஆணையர் , இணை ஆணையர் ஆகியோருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன.

கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணை இடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில் 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழிலும் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டதையும், அதைப் பின்பற்றி சதய விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்றும் மணியரசன் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.பலரும் இதனை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு தமிழில் சதய விழாவை நடத்த கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 26 ஆம் நாள் காலை சதய விழாவில் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்படுகின்றனவா என்பதைப் பார்க்க தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் குழுவின் தலைவர் ஐயனாவரம் சி.முருகேசன், பொருளாளர் பழ.இராசேந்திரன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றித்தமிழன், கோவேந்தன், மகளிர் ஆயம் செந்தாமரை உள்ளிட்டோர் குழுவாகச் சென்று பெருவுடையார் கோயிலின் கருவறையில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கப்படுவதை நேரில் கண்டு உறுதி செய்தனர்.

தேவாரம் – திருவாசகம் ஆகிய தமிழ்த் திருமறைப்பாடல்கள் பெருவுடையார் கருவறையில் ஒலிக்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, மாமன்னன் இராசராசன் சிலைக்கு தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். மகளிர் ஆயம் தலைவர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட திரளான தோழர்கள் இதில் பங்கேற்று மாமன்னன் ராஜராஜன் மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக என உணர்ச்சிப்பெருக்கில் முழக்கமிட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response