தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியுள்ள ரஜினியும், கமலும் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்திப் பேசி வருகிறார்கள். எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான், எம்ஜிஆர் எங்கள் சொத்து என தேர்தல் பரப்புரையில் கமல் ஹாசன் எம்ஜிஆர் பற்றிப் பேசி வருகிறார்.
இதை நாம் தமிழர் கட்சி சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிங்களப் பேரினவாத அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 2010 ஆம் ஆண்டுச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் “நீ என் மீனவனை அடித்தால், நான் உன் மாணவனை அடிப்பேன்” என்று பேசியதற்காக சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின், அவ்வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
பிறகு அதே ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி 10 நிமிடம் அதிகம் பேசியதாகச் சென்னை மாநகரக் காவல்துறையால் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவ்வழக்கின் விசாரணைக்காக இன்று (23-12-2020) காலை 10 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் அவர்கள் நேர் நின்றார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,
பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்ஜிஆர் அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியைத் தந்தார்? பரப்புரையில் எம்ஜிஆர் குறித்துப் பேசினால்,மக்கள் அதிமுகவின் இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களைக் கேவலமாக நினைக்கிறார்.
தேர்தலில் ரஜினி கமலுக்குக் கிடைக்கும் அடி,இதன்பின் எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில், விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். ரஜினியும் கமலும் எம்ஜிஆரை தூக்கிப் பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குத்தான் செல்லும்
இவ்வாறு அவர் கூறினார்.