விழுப்புரத்தில் படுகொலை, கூட்டு வன்புணர்வில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (27-02-2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள வெளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி என்பவர் தனது வீட்டில் மகன் மற்றும் மகளுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது மர்மக் கும்பலால் மிகக்கோரமாகத் தாக்கப்பட்டதில் மகன் உயிரிழந்தார்;
தாயும், கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அவரது 14 வயது மகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர் எனும் செய்தியானது தாங்கொணாத் துயரத்தையும், ஆறா பெரும் ரணத்தையும் தருகிறது.
மனிதத்தன்மைத் துளியுமற்ற இத்தகைய கொடுங்கோலர்கள் நிறைந்திருக்கிற இக்கொடிய சமூகத்தில்தான் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும்போது வெட்கித் தலைகுனிகிறேன்.
கணவனை இழந்துவிட்டு தனியொரு ஆளாக நின்று தனது பிள்ளைகளைக் கரைசேர்க்கப் போராடிய அத்தாய்க்கும், அவரது பிள்ளைகளுக்கும் நிகழ்ந்த இப்பெருங்கொடுமையை எண்ணும் போது உள்ளம் பதைபதைக்கிறது. இதனைச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்விதப் பரிவும் காட்டாது கடும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் உள்ளவோட்டமாக இருக்கிறது.
ஆகவே, சாதி, மதம் என எதன்பொருட்டும இச்செயலைச் செய்தவர்களைத் தப்பிக்க விடுவதோ, அவர்களுக்காகப் பரிந்துபேசி நியாயப்படுத்த முயல்வதோ கூடாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அது மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஆராயி மிகவும் பின்தங்கியப் பொருளாதார சூழலில் மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட்டு தனது வாழ்க்கையினை நகர்த்தி வந்திருக்கிறார். இத்தகைய நிலையில் அவருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் நிகழ்ந்த இக்கொடுமையினைக் கண்டு மாந்தநேயமுள்ள எவராலும் உள்ளம் கொதிப்படையாதிருக்க முடியாது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. வன்முறையையும், தாக்குதலையும் எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது என்றாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதான இவ்வடக்கு முறைகளும், ஒடுக்குமுறைகளும் முதன்மையாகக் களையப்பட வேண்டியதாகும்.
இவை யாவும் சமத்துவமும், சகோதரத்துவமும் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படாவண்ணம் பிளக்கும் கொடுந்தீய சக்திகளாகும். அவற்றிற்கு எதிராகப் போராட வேண்டியதும், ஒடுக்கப்பட்டு நிற்கிற நம் உடன்பிறந்தவர்களின் உரிமைக்காக உடன்நின்று அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் ஒவ்வொரு தமிழரின் இனமானக் கடமையாகும்.
எனவே, இப்படுகொலையை நிகழ்த்திட்ட அக்கொடுங்கோலர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.