ராகுலைக் கீழே தள்ளிவிட்ட காவல்துறை – தலைவர்கள் கண்டனம் உபி அரசுக்குப் பின்னடைவு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14 ஆம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.மிகவும் கொடூரமாக வதைக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த காவல்துறையினர் நேற்று அதிகாலை தகனம் செய்தனர்.

இந்நிலையி்ல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று ஹத்ராஸ் புறப்பட்டனர்.

ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற காரை மாவட்ட அதிகாரிகள் மறித்தனர். மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதிக்க மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரசு நிர்வாகிகளும், தொண்டர்களும் நடந்தனர்.

நடந்து சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதால்,காவல்துறையினர் ராகுல் காந்தியைத் தள்ளிவிட்டனர். ராகுல் காந்தி கீழே விழுந்தார்.
அதன்பின் காவல்துறையினர் ராகுல் காந்தியிடம் கைது செய்வதாகத் தெரிவித்தனர்.

அப்போது ராகுல் காந்தி காவல்துறையினரிடம், “ எதற்காக என்னைக் கைது செய்கிறீர்கள். எந்தச் சட்டத்தில் கைது செய்துகிறீர்கள்.இப்போதுதான் என்னைப் பிடித்து தள்ளினார்கள். தாக்கினார்கள், கீழே தள்ளினார்கள். நான் கேட்கிறேன். இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடக்க வேண்டுமா. சாமானிய மனிதர் நடக்கக் கூடாதா. எங்கள் வாகனத்தை மறித்தீர்கள், அதனால் நடக்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஆனால், 144 தடை உத்தரவு தடையை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் நடக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரையும் ஐபிசி பிரிவு 188ன் கீழ் கைது செய்வதாகச் சொல்லி அழைத்துச் சென்றனர்.

கைது செய்து காவல்துறை வாகனத்தில் அவர்களை ஏற்றியதும் அவ்வாகனத்தை மறித்து காங்கிரசுக் கட்சியினர் மறியல் செய்தனர்.

மறியல் செய்தவர்கள் மீது தடியடி நடத்தினர். அதில் பலருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.அதையும் மீறி அனைவரையும் தாக்கி ஒதுக்கிவிட்டு ராகுல்காந்தி பிரியங்காகாந்தி ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றனர்.

இந்நிகழ்வு இந்தியா முழுதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல்காந்தியை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உட்பட இந்தியா முழுதும் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள்னர்.

ராகுல்காந்தியைத் தவறாகக் கையாண்ட இந்நிகழ்வு உபி பாஜக அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a Response