தஞ்சையில் நடந்த ஏரி ஊழல் – விசாரணை கோரி பெ.மணியரசன் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் – ஆச்சாம்பட்டியில் ஏரி வேலையில் நடைபெற்றுள்ள ஊழலைக் கண்டித்தும், அதைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டுமெனக் கோரியும் இன்று (28.07.2020) காலை – கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆச்சான் ஏரிக்கரையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அது குறித்த செய்திக்குறிப்பு…..

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியக் கவுனிசில் உறுப்பினர் திருமதி.லதா சுப்ரமணியன் (சி.பி.ஐ), ஆச்சாம்பட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் மருதைய்யன், அ.ம.மு.க. கிளைச் செயலாளர் க. சின்னத்துரை, “வலிக்கும் முன் விழிப்போம்” தங்கராசு, தமிழ் மாநிலக் காங்கிரசு டி.பாலகிருஷ்ணன், க.தனராசு, சை.சேகர் உள்ளிட்டோரும் ஊர் மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டையைத் தலைமை இடமாகக் கொண்ட பொதுப்பணித்துறையின் அக்கினியாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் பூதலூர் வட்டம் ஆச்சாம்பட்டி கிராமம் ஆச்சான் ஏரி வருகிறது. இந்த ஏரியின் பாசனத்தில் 250 ஏக்கர் நிலம் உள்ளது.

ஆச்சான் ஏரியின் நீர் கொள்ளளவை அதிகப்படுத்தவும், கரையைச் சீர் செய்யவும், ஏரியில் உள்ள மூன்று குமிழிகளைப் புதிததாகக் கட்டவும் சுமார் 40 இலட்சம் ரூபாய் திட்டத்தில் பணிகள் ஒப்பந்தக்காரர் இளவரசனிடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்தது.

இந்தத் திட்டம் நபார்டு வங்கியின் மூலம் நிதி பெற்று செயல்படுத்தப்படுகிறது. மூன்று ஆண்டுகளாகியும் ஆச்சான் ஏரி வேலைகளை இன்றுவரை ஒப்பந்தக்காரர் முடிக்கவில்லை.

புதிய குமிழிகள் கட்டுவதற்காக மூன்று பழைய குமிழிகளை உடைத்துப் போட்டு கட்டாமல் விட்டதால், கடந்த ஆண்டு (2019), ஏரிக்கு வந்த தண்ணீர் அந்தக் குமிழி உடைப்புகள் வழியே வெளியேறி விட்டது. நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. அதன்பிறகு இரண்டு குமிழிகளைக் கட்டி முடித்தார் ஒப்பந்தக்காரர். மூன்றாவது குமிழியான நந்தவனக் குமிழி உடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகக் கட்டப்படாமல் கிடப்பதால் ஏரிக்கு வரும் தண்ணீர் அதன் வழியாக வெளியேறி விடுகிறது. ஏரிக்கு நீர் வரும் வழியில் முதல் குமிழி நந்தவனக்குமிழி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஏரிக்கு வந்த தண்ணீர் வெளியேறிவிட்டதால் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. நடப்பு ஆண்டில் நல்ல வகையில் தென்மேற்குப் பருவமழை அடிக்கடி பெய்து ஏரிக்குத் தண்ணீர் வாரிகளின் வழியே ஓடி வந்தும், அந்தத் தண்ணீரைத் தேக்க முடியாமல், நந்தவனக் குமிழி வழியே வெளியேறிவிட்டது.

ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி, பாலையப்பட்டி ஊராட்சிகளைச் சேர்ந்த ஏழு ஏரிகளின் வெட்டு வேலை, குமிழி, கலுங்கல் புதுப்பித்தல், கரை சீர்படுத்தும் வேலை முதலியவற்றை தொகுப்பு ஒப்பந்த முறை என்று ஒன்றைச் சொல்லி, திறந்த ஏலம் விடாமல் ஒப்பந்தக்காரர் இளவரசன் என்பவருக்குக் கொடுத்தது பொதுப்பணித்துறை.

இந்த ஏழு ஏரிகளில் மூன்றாண்டுகளில் செங்கிப்பட்டி சூக்குடி ஏரியைத் தவிர மற்ற ஆறு ஏரிகளின் வேலைகளும் இன்றுவரை நிறைவு பெறாமல் அரைகுறையாக நிற்கின்றன. சற்றொப்ப மூன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் திட்ட மதிப்பீடு கொண்ட ஏழு ஏரிச் செப்பனிடும் பணிகளில் கணிசமாக ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலில் பலன் அடைந்த “மேல் இடத்தார்” ஒப்பந்தக்காரர் இளவரசனை உரிய காலத்தில் உரிய மதிப்பீட்டின்படி வேலை வாங்கத் துணிச்சலற்றுப் போனார்கள். இதனால் மேற்படி ஏழு ஏரிப் பாசனமும் சாகுபடியும் பாதிக்கப்பட்டு உழவர்கள் பேரிழப்பிற்கு ஆளாகியுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு ஊழலுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விரைந்து ஏரிப் பணிகளை முடிக்கக் கோரிக்கை வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆச்சான் ஏரி உள்ளிட்ட தொகுப்பு ஒப்பந்தத்தில் இளவரசனிடம் தரப்பட்ட ஏழு ஏரி ஊழலைக் கண்டறிய வருவாய்த் துறையின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும், ஆச்சான் ஏரி வெட்டுவேலை, சீரமைப்புப் பணி, நந்தவனக் குமிழி வேலைகளை போர்க்கால அவசரத்துடன் முழுமையாக நிறைவேற்ற வேண்டும், அய்யனார் வாரி அணைக் கட்டிலிருந்து ஆச்சான் ஏரிக்குத் தண்ணீர் வரும் வாரியைத் தூர்வாரித் தடையின்றி தண்ணீர் வரச் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response