அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தரும் ஊழல் – அம்பலப்படுத்தும் கி.வெங்கட்ராமன்

அண்ணா பல்கலைக் கழகத்தில் அதிர்ச்சிதரும் ஊழல்.குற்றக் கும்பலைக் கூண்டில் ஏற்றுக என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில், ஆசிரியர் அமர்த்தலில் நடைபெற்றுள்ள இமாலய ஊழலை சென்னை, அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் நேரடி விசாரணையின் அடிப்படையில், ஒரே ஆசிரியர் பல கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியராகக் கணக்கில் காட்டப்படும் ஊழல் நடந்திருப்பதை இவ்வியக்கம் வெளிப்படுத்தி யிருக்கிறது.

224 இணைப்புக் கல்லூரிகளில் இந்த மோசமான முறைகேடு நடந்திருக்கிறது. 224 கல்லூரிகள் என்றால், அண்ணா பல்கலைக் கழகத்தில் மொத்தமுள்ள 480 இணைப்புக் கல்லூரிகளில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான கல்லூரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன என்று பொருள். மொத்தம் 353 கல்லூரி ஆசிரியர்கள் ஒரு பொறியியல் கல்லூரிக்கு மேல், ஒரே நேரத்தில் முழுநேர ஆசிரியராக பணியாற்றுவதாகக் கணக்குக் காட்டியுள்ளனர்

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டில் பெரும்பாலானவை உண்மையென அண்ணா பல்கலைக்கழகமே ஒத்துக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் 25.7.2024 அன்று செய்தியாளர்களிடம் கூறும்போது 211 ஆசிரியர்கள் சுமார் 2,500 இடங்களில் பணிபுரிவதாகக் காட்டியிருக்கிறார்கள் என ஒத்துக் கொண்டார். அதாவது, ஒரு ஆசிரியர் சராசரியாக ஒரே நேரத்தில், பத்து கல்லூரிகளுக்கு மேல் முழுநேரப் பேராசிரியராகப் பணிபுரிவதாகப் பதிவில் இருக்கிறார் என்று பொருள்.

ஒரு பேராசிரியர், ஒரே ஆள் 32 கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராக ஒரே நேரத்தில் பதிவில் இருக்கிறார் என துணைவேந்தர் வேல்ராஜே ஒத்துக் கொள்கிறார். பேராசிரியர் பட்டம் தாங்கிய ஐந்து ஆட்கள் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என சான்றுகளோடு அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, முனைவர் எஸ்.மாரிசாமி என்ற ஆள், சென்னை மீனாட்சி பொறியியல் கல்லூரி, கோவை கதிர் பொறியியல் கல்லூரி, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரி என 11 கல்லூரிகளில் துறைத் தலைவர், பேராசிரியர், துணைப் பேராசிரியர் என பல பதவிகளில் பதிவாகியிருக்கிறார்.அதே போல் முரளிபாபு, எம்.அரங்கராசன், எஸ்.வெங்கடேசன்,வசந்தா சாமிநாதன் எனப் பல பேர், வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள 10 கல்லூரிகளில் ஆசிரியர் பணியாற்றுவதாக பதிவேட்டில் இருக்கிறார்கள்.

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தரே, ‘சராசரியாக ஒருவரே பத்து இடங்களில் பணிப் பதிவேட்டில் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டால், பல்கலைக் கழக உயர்மட்டத்திற்குத் தெரியாமல் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுக்கள் அனைத்து இணைப்புக் கல்லூரிகளுக்கும் சென்று அங்குள்ள ஆசிரியர் பதிவேடு, பதிவில் உள்ள ஆசிரியர்களின் ஆதார் அட்டை, அவர்களது பிஎச்டி பட்டச் சான்றிதழ் மட்டுமின்றி, முனைவர் பட்டம் பெற்றதற்கான ஆய்வேடு வரை ஆய்வு செய்கிறார்கள். தேவையானால் அப்பேராசிரியர்களையே அழைத்து விசாரிக்கவும் செய்கிறார்கள். இந்த ஆய்வுக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையைப் பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்களைக் கொண்ட நிலைக் குழு கூராய்வு செய்கிறது.

இந்த நிலையில்,அறப்போர் இயக்கத் தலைவர் நண்பர் செயராமன் முன்வைக்கும் சான்றுகள் கவனிக்கத்தக்கவை.

எடுத்துக்காட்டுக்கு, ஆர்.பாபு என்ற பேராசிரியர் 2023 மே 26 ஒரே நாளில், கோயம்புத்தூர் பிபிஜி தொழில் நுட்பக் கல்லூரியிலும் இராமநாதபுரம் மொகம்மது சதக் பொறியியல் கல்லூரியிலும் வருகைப்பதிவில் இருக்கிறார். கோவைக்கும் இராமநாதபுரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 300 கிலோமீட்டர்.

இதே போல், ஜே.காளியப்பன் என்ற பேராசிரியர் 2023 சூன் 5 என்ற ஒரே நாளில், செங்கல்பட்டு எஸ்.எம்.கே. பார்மா தொழில்நுட்பக் கல்லூரியிலும், நாமக்கல் அன்னை மக்கம்மாள் சிரீலா பொறியியல் கல்லூரியிலும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

வெவ்வேறு மாவட்டத்திற்கு வெவ்வேறு ஆய்வுக்குழுக்கள் அனுப்பப்படுகின்றன.ஒரே ஆய்வுக்குழு ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டத்தில் ஆய்வு செய்தது என்றால் கூட, பல்கலைக் கழகத் தலைமைக்குத் தெரியாமல் கல்லூரி நிர்வாகம் பல்கலைக் கழகத்தையே ஏமாற்றிவிட்டது எனக் கொள்ளலாம்.

ஆனால், ஒரே நாளில் வெவ்வேறு கல்லூரிகளில், அதுவும் 300 கிமீ தொலைவில் உள்ள இரு வேறு கல்லூரிகளில் வருகைப் பதிவேட்டில் ஒரு ஆள் பெயர் இருக்கிறது என்றால், அது நிலைக்குழுவின் கூராய்வில் கண்டுபிடிக்கப்படாமல் போனதா? நம்பமுடியவில்லை. ஏனென்றால், இது 2023இல் மட்டும் நடந்த குற்றங்கள் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் இதே போல் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் வெவ்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் இணைப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதும் அந்த அறிவிப்பு வந்த ஓரிரு வாரங்களில் தொடர்புடைய கல்லூரி நிர்வாகங்கள் அக் குறைபாடுகளைச் சரி செய்துவிட்டதால் மீண்டும் இணைப்பாணை வழங்கப்பட்டதாகவும் அறிவிப்புகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த மோசடி நபர்கள் கண்டுபிடிக்க முடியாத சிக்கலான வழிமுறைகளைக் கையாண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.

எடுத்துக்காட்டாக, ராம்குமார் என்ற நபர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாஸ்தா பொறியியல் கல்லூரியில் கொடுத்துள்ள புகைப்படம் கைபேசியில் கிடக்கை வசத்தில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதே நபர், வேலூர் ஸ்ரீகிருஷ்ணா பொறியில் கல்லூரியில் கொடுத்துள்ள படம் செங்குத்துவாக்கில் எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது. இது ஒரே நபர்தான் என்பதை யாரும் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பல்கலைக்கழக ஆய்வுக்குழுவுக்கு மட்டும் இது தெரியாமல் ஏமாந்துவிட்டார்கள் என்று நம்ப முடியுமா?

திரைப்பட இரசிகர்களுக்கு ஒரு நடிகரின் இரட்டை வேடம் என்று சொல்லி, ஒரு பாத்திரத்தில் மீசை இல்லாமலும், இன்னொரு பாத்திரத்தில் முறுக்கு மீசையோடு மச்சம் ஒட்டியும் நடித்தால், அவர்கள் வெவ்வேறு பாத்திரம் என இரசிகர்கள் ஏற்றுக் கொண்டு பார்ப்பது போல், உண்மை வாழ்க்கையில் யாரும் ஏமாறுவார்களா? இல்லையே! ஆனால் திரைப்படத்தைப் போலவே, மாரிசாமி என்ற நபர் ஒரு கல்லூரியில் அண்மைக்காலப் புகைப்படத்தையும் இன்னொரு கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தையும் கொடுத்திருந்தாராம்.

இன்னொரு ஆள், ஒரு கல்லூரியில் தாடிவைக்காத படத்தையும். இன்னொரு கல்லூரியில் தாடியோடும் தோன்றும் புகைப்படத்தையும் கொடுத்திருந்தாராம். அதில் ஆய்வுக்குழுவினர் ஏமாந்துவிட்டார்களாம்! நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

இதே மாரிசாமி என்ற நபர், தன்னுடைய பிஎச்டி ஆய்வேட்டின் தலைப்பை, வெவ்வேறு கல்லூரிகளில் சிறுசிறு வெவ்வேறு மாற்றங்களுடன் முன்வைத்து, 11 கல்லூரிகளில் முழு நேரமாகப் பணியாற்றுவதாக பதிவேட்டில் இருக்கிறார். இதனை ஆய்வுக்குழுவால் மட்டுமின்றி, மூத்த பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ள கூராய்வுக்குழுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதையும் நம்பச் சொல்கிறார்கள்.

அண்ணா பல்கலைக் கழகத்தினுடைய பேராசிரியர்கள், பதிவாளர்கள், துணை வேந்தர்கள் என்ற நிலையில் மட்டும் இவ்வாறான மோசடிகள் நீண்டகாலமாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

குறைந்தது உயர்கல்வித் துறை அமைச்சர்கள் ஈடுபடாமல், இவ்வளவு வெளிப்படையான மோசடி நீண்டகாலத்திற்குத் தொடர முடியாது. அண்ணா தி.மு.க., இப்போதைய தி.மு.க. ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் அளவிலாவது இந்த ஊழல் வலைப்பின்னல் இல்லாமல், இது இவ்வளவு நீண்டகாலம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் தி.மு.க., அ.தி.மு.க. அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், அவர்களது ஊழல் நண்பர்கள் ஆகிய அதிகார அமைப்பினர் நடத்துவதுதான்.

இவ்வளவு நீண்ட காலம் அரசின் உயர்மட்ட ஆதரவோடு இந்தக் குற்றச் செயல் தொடர்ந்திருக்கிறது என்றால், பல கல்லூரிகளில் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லாமல் வகுப்புகளும் முழுமையாக நடக்காமல் மேல்மட்டத்தில் ஆள்பிடித்து மாணவர்களைத் தேர்ச்சிபெறச் செய்து எந்த வேலைக்கும் ஆகாத இளைஞர்களை, பட்டச் சான்றிதழோடு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். அதற்குத்தான் இலட்சம் இலட்சமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆசிரியர் அமர்த்தலில் இந்த மோசடி என்றால், கல்லூரி ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் போன்ற பல வகைகளிலும் கணக்கிட முடியாத ஊழல் நடந்திருக்கும் என யாரும் ஊகிக்க முடியும்.

தமிழ்நாட்டைப்போல் வேறெங்காவது மருத்துவத்துறையும், கல்வித்துறையும் இந்த அளவு சீரழிந்திருக்குமா என்பது ஐயத்திற்குரியது. எல்லாம் “கழக” ஆட்சிகளில் சாராய அதிபர்களும், கட்டைப்பஞ்சாயத்துப் பேர்வழிகளும், வேறு குறுக்கு வழியில் பணம் சேர்த்தவர்களும் மருத்துவத்திலும் கல்வியிலும் நுழைந்த பிறகுதான், இவ்வளவு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் சேர்த்துதான் கழக ஆட்சிகளில் கல்வியில் முன்னேறிய தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னேறிய தமிழ்நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆசிரியர் பணிநியமனத்தில் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை – குறைந்தது துணைவேந்தர் வேல்ராஜ் ஒத்துக்கொண்டிருக்கிற அந்த 211 நபர்கள் மற்றும் அதில் தொடர்புடைய கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் மீதாவது – உடனடியாக குற்றவழக்குப் பதிவு செய்து கூண்டிலேற்ற வேண்டும். தொடர்புடைய ஆசிரியர்களை ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் பணிநீக்கம் செய்வதோடு, இணைப்புக் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரத்தையம் இரத்து செய்ய வேண்டும். அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மாற்றுக் கல்லூரிகளில் இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழத்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response